வித்தியாசமாக எதையுமே செய்யாமல், வித்தியாசமான படம் என்று விளம்பரப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு மத்தியில் நிஜமாகவே வித்தியாசமான படைப்பாக, எளிய பட்ஜெட்டில் ‘எனக்கு என்டே கிடையாது.’
போதை மயக்கத்திலிருக்கும் அந்த பணக்காரப் பெண், தான் பயணித்த கால் டாக்ஸி டிரைவரை வீட்டுக்கு அழைக்கிறாள். டிரைவரும் உடன்படுகிறான். அவளுடன் சேர்ந்து சரக்கடித்துவிட்டு உடன்படுக்கிறான். ஆம், இதுவரை பக்கா அடல்ஸ் ஒன்லி தான்; 18+தான்…
‘சம்பவம்’ நடந்து முடிந்தபின், அந்த வீட்டில் ஒரு ஆண் பிணம் இருப்பதைக் கண்டு அதிர்கிறான். அவள் அவனை வெளியில் போகவிடாமல் தடுக்கிறாள். அப்போது ஏற்பட்ட மோதலில் மயங்கி விழுகிறாள்.
இப்போது வீட்டை விட்டு வெளியேறிவிடலாம் என்றால், ‘டிஜிட்டல் லாக்’ செய்யப்பட்ட அந்த அதிநவீன கதவு பாஸ்வேர்டு கேட்கிறது. அது தெரியாமல் அவனுக்குள் பயமும் பதற்றமும் தொற்றுகிறது.
அந்த நேரமாகப் பார்த்து இரண்டு ஆண்கள் அந்த வீட்டுக்குள் வருகிறார்கள். பிணத்தைப் பார்க்கிறார்கள். ஏற்கனவே ஒரு பிணம் அங்கிருக்கும் நிலையில், டிரைவருடன் மோதலில் ஈடுபட்ட அந்த பெண்ணும் இறந்திருப்பது தெரியவருகிறது. கொலைப் பழி டிரைவர் மீது விழுகிறது.
கொலை எப்படி நடந்தது? அந்த பழியிலிருந்து அவன் தப்பிக்க முடிந்ததா? வீட்டுக்கு வந்த இரண்டு பேர் யார்? எதற்காக வந்தார்கள்? இந்த கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதை பதில் சொல்கிறது.
படத்தை இயக்கி, கதாநாயகனாக நடித்திருக்கிறார் விக்ரம் ரமேஷ். இயக்குவதும் நடிப்பதும் புதிது என்றாலும் இரண்டிலும் தேர்ந்தவர் போலிருக்கிறது அவரது நடிப்பும் படத்தின் உருவாக்கமும். போதையிலிருக்கும் பெண்ணின் அழைப்பை ஏற்பது, அவளுடன் எக்கச்சக்கமாய் குடிப்பது, உடலோடு கலப்பது, பிணத்தைக் கண்டு மிரள்வது, தப்பிக்க திட்டமிட்டு செயல்படுத்துவது என காட்சிக்கு காட்சி கவனம் ஈர்த்திருக்கிறார்.
ஸ்வயம் சித்தா போதையில் மிதந்தும், போதையேற்றும் விழிகளோடும் ஏற்றிருக்கும் வில்லங்கமான பாத்திரத்திற்கு உரிய உயிரோட்டம் தந்திருக்கிறார்.
திருடன், அரசியல்வாதி என படத்தின் மற்ற சில கதாபாத்திரங்களை சுமந்திருப்பவர்களின் நடிப்பு நேர்த்தியாக இருக்க, பின்னணி இசை காட்சிகளுக்கு பொருந்திப் போயிருக்கிறது. ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் கச்சிதம்.
கிட்டத்தட்ட படத்தின் மொத்த காட்சிகளும் ஒரு வீட்டின் இரண்டொரு அறைகளுக்குள் நடந்தாலும் திரைக்கதை பரபரவென நகர்வதாலும், சில திருப்பங்களாலும் சலிப்பின்றி ரசிக்க முடிகிறது.