தேர்தல் களத்தின் அநியாய அக்கிரமங்களை தோலுரிக்கும் கதைக்களத்தில் கமர்சியல் அம்சங்கள் கலந்த படம்.
தன் தந்தை அங்கம் வகிக்கிற கட்சியில் அவரது செல்வாக்கிற்கும் உழைப்புக்கும் உரிய அங்கீகாரம், பொறுப்பு, பதவி என எதுவும் கிடைக்காததால் ஆத்திரப்படுகிறார் கதையின் நாயகன் விஜயகுமார். அப்படியான தருணத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அப்பாவின் கட்சி தலைவர் நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகிறார். அதனால் அவர் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்; சில இழப்புகளையும் சந்திக்கிறார். அதையெல்லாம் கடந்து தேர்தலில் வென்றாரா இல்லையா என்பது நிறைவுக் காட்சி… இயக்கம் சேத்துமான் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தமிழ்
வாலிப வயதில் இள ரத்தம் சூடானால் அந்த பருவத்திலிருக்கும் இளைஞன் எப்படியெல்லாம் இருப்பானோ அப்படியொரு கதாபாத்திரத்தில் விஜயகுமார். அநியாயத்தை தட்டிக் கேட்கும்போது சீறிப்பாய்கிற கோபம், சூழ்ச்சிகளை எதிர்கொள்வதில் காட்டுகிற துடிப்பு, தோல்வியடையும்போது வருகிற வலி, தேர்தலில் சொந்த அப்பாவின் ஆதரவு கிடைக்காத விரக்தி, தாய்மாமனை இழக்கும்போது வெடிக்கும் அழுகை, பலி வாங்குவதில் வெறித்தனம், அளவான அழகான ரொமான்ஸ் என நடிப்புப் பங்களிப்பு பக்கா.
விஜயகுமாரின் மனைவியாக வருகிற பிரீத்தி அஸ்ராணி, கணவனின் போராட்டக் குணத்திற்கு உரம் போடுபவராக கச்சிதமான நடிப்பைத் தர, விஜயகுமாரின் தந்தையாக வருகிற ஜார்ஜ் மரியான் கட்சியின் விசுவாசமான தொண்டனாக அதற்கேற்ற அப்பாவித்தனத்தை தன் நடிப்பில் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
மனைவியின் அண்ணனான விஜயகுமாரை தேர்தலில் போட்டியிடத் தூண்டுவது, அவருடைய வெற்றிக்காக முழு மனதுடன் செயல்படுவது என பாவெல் நவகீதனின் நடிப்பு தனித்துவமான திரைமொழி பேசியிருக்கிறது.
மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களின் நடிப்பு நேர்த்தியாக இடம்பிடித்திருக்க, கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை காட்சிகளை பரபரப்பாக நகர்த்த உதவியிருக்கிறது. ‘தீரா என் ஆசை’ பாடல் தாலாட்டின் இதம் தர, கதைநாயகனின் புகழ் பாடும் ‘நல்லூரு மன்ணின் சிங்கம்’ பாடல் எனர்ஜியோடு கடந்து போகிறது.
பதவி வெறியர்களை எதிர்த்து சாமானியன் ஒருவன் களமிறங்கினால், அந்த களம் எப்படியிருக்கும் என்பதெல்லாம் மக்கள் பார்க்காததல்ல. அதை அப்படியே இந்த படத்திலும் பார்ப்பது சற்றே சலிப்பு தருகிறது. அந்த சலிப்பைத் தவிர்க்கும்விதமாக, திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் இந்த எலக்சன் எண்ணமுடியாத அளவுக்கு கலெக்சன் அள்ளியிருக்கும்.
Rating 3.5/5