மோகன்லால் நடிப்பில், நடிகர் பிருத்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில் ‘லூசிஃபர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள படம் ”L 2: எம்புரான்.’
இந்த படம் கடந்த 27-ம் தேதி பான் இந்தியத் திரைப்படமாக தமிழ், மலையாளம், தெலுங்கு , கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தின் மொழியாக்க வடிவமைப்பாளராக, டப்பிங் இயக்குநராகப் பணியாற்றிய ஆர்.பி. பாலா படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றிப் பேசும்போது,
“நான் இன்று நல்லதொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் இங்கே உங்கள் முன் பேசுவதற்கும் காரணமாக இருப்பவர் மோகன்லால் சார் தான். அவரது ‘புலி முருகன்’ படத்தில் தான் நான் முதலில் தமிழில் மொழியாக்கம் பொறுப்பை ஏற்றுப் பணியாற்றினேன்.
அந்தப் படம் மலையாளத்தில் பிரமாதமான வெற்றி பெற்றது. தமிழிலும் பேசப்பட்டது. எனது வாழ்க்கையை புலி முருகனுக்கு முன், புலி முருகனுக்குப் பின் என்று இரண்டாகப் பிரித்துப் பார்க்கும் அளவுக்கு எனது வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது அந்தப் படம்.
மோகன்லால் சார் நடிப்பில் இப்போது வந்துள்ள ‘எம்புரான்’ படத்தை பிருத்திவிராஜ் இயக்கி உள்ளார். அவர்கள் கூட்டணியில் ஏற்கெனவே உருவான ‘ லூசிஃபர்’ படத்திலும் நான் பணியாற்றினேன். அந்தப் படத்தில் பணியாற்றிய போது எனது தமிழ் மொழியாக்க, டப்பிங் பணிகள் பற்றிக் கருத்து கேட்பதற்காகச் சில காட்சிகளைப் பார்க்க முடியுமா என்று கேட்டேன். பணிகளில் பரபரப்பாக அவர் பிஸியாக இருந்ததால் முதலில் தயங்கினார். சில நிமிடங்கள் மட்டும் பார்ப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரோ பாதி படத்தையே பார்த்துவிட்டார். அவருக்குப் பிடித்து நிறைவாக இருந்தது, பாராட்டினார், லூசிஃபர் பெரிய வெற்றி பெற்றது. அவர் எனக்கு இந்த எம்புரான் படத்தில் வாய்ப்பு அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி.
படத்தின் இயக்குநர் பிருத்திவிராஜ் பேசும்போது இந்த படத்தை அந்தந்த மொழிகளில் அந்தந்த மொழிப் படமாகவே பார்த்து ரசியுங்கள் என்று கூறியிருந்தார்.அதற்கு ஏற்ற வகையில் தான் அனைத்து மொழிகளிலும் மொழியாக்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
எம்புரான் படத்தைப் பார்த்த மக்கள் இந்தப் படம் மலையாளத்தில் எடுத்து தமிழில் டப் செய்தார்களா அல்லது தமிழிலேயே எடுத்தார்களா என்று வியக்கும் அளவிற்கு படம் அமைந்துள்ளது.
‘ஆர்பி பாலாவின் தமிழ் வசனங்கள் அந்தக் கதாபாத்திரங்கள் பேசும் பொழுது மிகவும் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கின்றன’ என்று ஊடகத்துறையினர் பாராட்டியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி.விருதுகளை விட சிறந்தது மக்களின் பாராட்டுதான். அது எனக்குக் கிடைத்து வருகிறது.
எம்புரான் படத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் நான்கு மொழிகளிலும் டப்பிங் பணியாற்றி இருப்பது ஒரு பெருமையான அனுபவம். இது ஒரு பிரமாண்டமான படம். நிச்சயமாக பெரிய அளவில் வெற்றி பெறும்.என் வாழ்க்கையையே திசை மாற்றிய மோகன்லால் சாருக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.