மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மோகன் லால் நடிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்.’
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தின் அடுத்த பாகம் குறித்த எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் இருந்தது.
இந்நிலையில் இந்திய திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம்- மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிப்பில் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் தயாராகும் ‘எம்புரான்’ எனும் புதிய திரைப்படத்தை மலையாள திரையுலகின் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
ஜி.கே.எம் தமிழ் குமரன் லைக்காவின் தலைமை பொறுப்பு வகிக்க இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.
சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள்.
இந்த படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.