விஜய்குமார் நடிப்பில், தமிழ் இயக்கியுள்ள ‘எலக்சன்‘ திரைப்படம் வரும் மே 17-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் படக் குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் நாயகன் விஜய்குமார் பேசியபோது, ”உள்ளாட்சித் தேர்தல் அரசியலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் இது. களம் தேர்தலாக இருந்தாலும் கருத்துக்களை வலிந்து திணிக்காமல், அரசியலை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஒரு ஃபேமிலி டிராமாவாகத்தான் இந்த படம் தயாராகி இருக்கிறது. படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் படம் எந்த பிரச்சாரத்தையும் செய்யவில்லை. இந்தப் படத்தின் முதுகெலும்பு… இந்த கதையின் முதுகெலும்பு பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. நடிகர் ஜார்ஜ் மரியம் ஏற்று நடித்திருக்கும் நல்ல சிவம் என்ற ஒரு அரசியல் கட்சி தொண்டரை தான் சொல்ல வேண்டும். கட்சி தொண்டன் என்றால் தன்னலம் பார்க்காமல் மக்களுக்காகவும், கட்சிக்காகவும் கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு கேரக்டர். நம்மில் பெரும்பாலானவர்கள் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நம் குடும்பத்திலேயே பார்த்திருப்போம். அப்பா… பெரியப்பா… சித்தப்பா.. மாமா.. என யாரேனும் ஒருவரை பார்த்திருப்போம்.
‘அமாவாசை’ போன்றவர்கள் இருக்கும் அரசியலில் இப்படி கொள்கைக்காகவும், கட்சிக்காகவும் உழைக்கிற நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம் பற்றிய கதை இது.
இப்படி இருப்பவர்களை ஏமாளியாகவும், பிழைக்கத் தெரியாதவர்களாகவும் இந்த உலகம் பேசும் போது அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும், அவருடைய மகனுக்கும் ஒரு நியாயமான கோபம் இருக்கும். அப்படி ஒரு மகன் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் இயக்குநர் தமிழுடன் இணைந்து பணியாற்றியது மிகுந்த மனநிறைவை அளித்தது.
தயாரிப்பாளர் ஆதித்யாவுடன் இது இரண்டாவது படம். தொடர்ந்து தரமான படங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது எண்ணம். படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் தமிழ் பேசியபோது, ”நான் விஜயகுமாரிடம் படத்தின் திரைக்கதையை கொடுக்கும்போது வசனத்தில் ‘ஸ்லாங்’ இல்லை. வசனங்களில் அழுத்தம் வேண்டும் என்றும் விரும்பினேன். இதற்காக உதவியவர் தான் எழுத்தாளர் அழகிய பெரியவன். அவர் படத்திற்கு வசனம் மட்டும் எழுதவில்லை படக்குழுவினருடன் இணைந்து ஆர்வமுடன் பயணித்து பல படப்பிடிப்பு தளங்களை அடையாளம் காட்டினார். படம் தணிக்கை செய்யப்பட்டபோது ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது கூட உடனடியாக அவர் விளக்கம் அளித்தார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா, ‘எலக்சன்’ ஒரு அரசியல் திரைப்படம். அரசியல் என்றால் மேம்போக்கான அரசியலை சொல்லவில்லை. இதுபோன்ற வகையிலான திரைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது” என்றார்.
கதாநாயகிகள் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, நடிகர் பாவெல் நவகீதன், திலீபன், படத்தை வெளியிடுகிற சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.