சராசரி மனிதனாக இருந்தவன் தனக்குள் பாலின மாறுபாட்டை உணர்ந்து மாறும்போது குடும்பத்தினரால் ஒதுக்கி வைக்கப்படுவது, சமூகம் தருகிற அவமானங்களால் மன உளைச்சலுக்கு ஆளாவது என படாத பாடு பட வேண்டியிருக்கும். ஒரு விதத்தில் நரக வேதனை. அதையெல்லாம் நேரிலும் திரையிலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த படத்தின் மையக்கருவும் அதேதான்.
பழக்கப்பட்ட விஷயங்களுக்குள் சற்றே ஆழமாக சென்றதும், நட்பை அடிப்படையாக வைத்துக் கொண்டு வில்லங்க விவகாரத்தை அணுகியதும், கார்த்திக் சுப்புராஜின் தனித்துவமான திரைமொழியும் இந்த படத்தின் தனித்துவம்.
கார்த்தியுடன் பள்ளிப் பருவத்திலிருந்து தன்னுடன் நெருங்கிப் பழகிய நண்பன் சுப்பு. அவன் ஒரு கட்டத்தில் தனக்குள்ளிருக்கும் பெண்மையை உணர்ந்து திருநங்கையாக மாறுகிறான். அவனைக் கொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறான் கார்த்தி. கொன்றானா இல்லையா என்பது பரபரப்பான இரண்டாம் பாதி.
கொல்ல வேண்டிய கட்டாயம் ஏன் வந்தது? என்பதை விவரிக்கிற முதல் பாதியில் கார்த்தி – சுப்புவின் பள்ளிப் பருவம், இளமைப் பருவம், அவர்கள் இருவரும் ரவுடித்தனத்தில் ஈடுபடுவது, டோரதி என்கிற இளம்பெண்ணுடன் நெருங்கிப் பழகும் சுப்புவின் இனிமையான நாட்கள் என ஏகப்பட்ட எபிசோடுகள்…
கொலை செய்யத் துணிந்தபின் உருவாகும் தடுமாற்றத்தில் கார்த்தியாக வருகிற ரிஷிகாந்தும், ‘முடிச்சுட்டு போ’ என உயிரைக் கொடுக்க முன் வரும் சுப்புவாக சனந்தும் நட்பின் ஆழத்தை, அதைவிட யாரும் கச்சிதமாய் உணர்த்திவிட முடியாது என்கிற அளவுக்கு நடித்திருக்கிறார்கள். அதிலும் திருநங்கையாக சனந்தின் உடல்மொழி அட்டகாசம்.
சனந்தின் அண்ணியாக கீர்த்தி சுரேஷ். அவருக்கும் சனந்துக்குமான பழக்கம், நெருக்கம், உரையாடல் கவிதையாக கடந்துபோக, கீர்த்தி சுரேஷின் நடிப்பு அந்த காட்சிகளை அழகுபடுத்துகிறது.
வேட்டை முத்துக்குமார் ஆணாதிக்கத்தின் உச்சத்திலிருக்கிறவராக, ஆணவக் கொலைகளை அசால்ட்டாக செய்பவராக அலட்டலில்லாமல் மிரட்டியிருக்கிறார். செளந்தரராஜா, ஜீவா சுப்ரமணியம் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பு நேர்த்தி.
இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் திருவின் ஒளிப்பதிவும் படத்தை வேறோரு மகத்துவமான உயரத்துக்கு கொண்டு செல்கின்றன.
பாலின பாகுபாடு விவகாரத்தில் சமூகம் எத்தனை மூர்க்கதனமாக நடந்து கொள்கிறது என்பத ரத்தமும் சதையுமாக, ராவாக பதிவு செய்திருக்கும் இந்த டோரதி ஊர் உலகத்தில் விவாதங்களை எழுப்புவது சகஜமாக நடந்து விடும். படத்தைப் பார்த்தபின் ஆண் பெண் தவிர்த்த மாற்றுப் பாலினத்தவரை மரியாதையாகவோ கனிவாகவோ பார்க்கும்படியான உணர்வுத் தூண்டல் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
Rating 3.5 / 5 

