மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோவொரு விஷயத்துக்கு அடிமையாகியிருப்பதை மையமாக வைத்து, அதனால் அவர்களுக்கும், அவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும், சமூகத்துக்கும் என்ன விதமான பாதிப்புகள் உருவாகின்றன என்பதை எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வூட்டும் படம்.
கதை ஒரு அப்பார்ட்மெண்டில் நடக்கிறது. ஒரு பெண், எந்த நேரமும் செல்போனில் மூழ்கியிருக்கும் தன் மகனை கண்டித்துக் கொண்டேயிருக்கிறார். அதே பெண் அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது, யார் வீட்டுக்கு யார் யார் வந்து போகிறார்கள் என்பதையெல்லாம் நோட்டமிட்டு, தன் சிநேகிதிகளிடம் பகிர்வதை அதாவது ஊர்வம்பு பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதனால் அந்த அம்மாவை சிலர் எதிரியாக பார்க்கிறார்கள். தொடர்ந்து தன்னை கண்டிப்பதால் மகனும் அம்மாவை எதிரியாக நினைக்கிறான்.
அதே அபார்ட்மெண்டில் வசிக்கும் இன்னொரு கணவன் மனைவி இன்ஸ்டாவில் வீடியோ போட்டு பிரபலமாகியிருக்கிறார்கள். அந்த மனைவி வீட்டில் தனியாக இருக்கும்போது அவரது ரசிகர் ஒருவர் வருகிறார். வந்தவர் அந்த பெண்ணுடன் சேர்ந்து போட்டோவும் ரீல்ஸ் வீடியோவும் எடுக்க ஆசைப்படுகிறார். சந்தர்ப்ப சூழல் சரியில்லாத்தால் பெண் மறுக்க, ரசிகர் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார். அதனால் பிரச்சனை தீவிரமாகிறது.
இன்னொரு இளம்பெண் பெண்ணிய சிந்தனையோடு வலம் வருகிறார். அவருக்கு காதலனுடன் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது. காதலன் போலீஸ் பிடியில் சிக்குகிறான். அவளைப் பற்றி அபார்ட்மென்டில் தவறாக பேசிக் கொள்கிறார்கள்.
ஒரு நடுத்தர வயதுக்காரர் தன் மனைவி, குழந்தை என குடும்ப நினைப்பில்லாமல், வேலை வெட்டிக்குப் போகாமல், விதவிதமாக காரணம் சொல்லி நண்பர்களிடம் கடன் வாங்கி குடித்துக் கொண்டு ஜாலியாக நாட்களைக் கடத்துகிறார். அவருக்கும் ஊர்வம்பு பெண்ணுக்கும் தகராறு உருவாகிறது.
இன்னொரு பெண் தொடர்ந்து செக்ஸ் வீடியோக்கள் பார்க்கிறார். நண்பனுடன் ஜாலியாக இருக்கிறார். அந்த இரு விஷயங்களாலும் அவளுக்கு பெரிய சிக்கல் உருவாகிறது.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் அடிமையாக இருக்கிற சூழ்நிலையில் அபார்ட்மெண்டில் ஒரு கொலை நடக்கிறது.
கொலையானது யார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்?
இந்த கேள்விகளுக்கு, 93 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தின் கடைசி 15 நிமிடங்களில் பதில் கிடைக்கிறது. இயக்கம் ‘வெப்பம் குளிர் மழை’ படத்தில் வெள்ளந்தித்தனமான நடிப்பால் கவர்ந்த திரவ்
கடன் வாங்குவதற்கும் குடிக்கு அடிமையாகி அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பவராக திரவ், பெண்ணிய சிந்தனையாளராக நிகிலா சங்கர், இன்ஸ்டா பிரபலங்களாக நிஜ இன்ஸ்டா பிரபலங்கள் விஜய், விபிதா என நடித்துள்ள அத்தனைப் பேருமே கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான எளிமையான நடிப்பை தந்திருக்க, இன்ஸ்டா பிரபலம் ‘குற்றம் கடிதல்’ சத்யா சச்சு அபார்ட்மென்டே ஆட்டம் காணும் அளவுக்கு கத்திக் கொண்டேயிருக்கிறார்.
ஆலன் ஜோஷியின் பின்னணி இசை கதையின் போக்கிற்கேற்ற பரபரப்பைத் தந்திருக்க, திரவ் வரிகளில் வான் மேகமே பாடல் படத்தின் நிறைவுக்கு அழகு சேர்த்திருக்கிறது.
உருவாக்கத்தில் சில குறைகள் இருந்தாலும் ‘ஜாலியாக அனுபவிக்கிற எதற்கும் அடிமையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; மீறினால் ஆபத்துக்களை சந்திப்பதிலிருந்து தப்பிக்க முடியாது’ என எச்சரித்த விதத்தில், முன்னுதாரண சமூக அக்கறைப் படைப்புகளின் வரிசையில் இணைகிறது டொபொமைன் @2.22 !
Rating 3 / 5