‘அடப்பாவி, இதற்காகவா கொலை செய்தாய்?’ என்று படத்தில் வரும் கொலைகாரனைப் பார்த்துக் கேட்கத் தோன்றுகிறது. அப்படியொரு ‘சைக்கோ’வை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம்.
ஆரம்பக் காட்சியில் புதர்போல் வளர்ந்துவிட்ட தாடி, மீசைக்குள் புதைந்துகிடக்கும் அந்த இளைஞர் போதைக்கு அடிமையாகியிருப்பதை பார்க்க முடிகிறது. தாங்க முடியாத மனவேதனையில் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
அவரது காதலி கடத்திக் கொல்லப்பட்டதால் அவர் அப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் என்பதையும், காதலியைக் கொன்றவனை கண்டுபிடித்து பழி வாங்கும் வெறியுடன் இருக்கிறார் என்பதையும் அடுத்தடுத்த காட்சிகள் எடுத்து காட்டுகின்றன.
இப்படி படத்தின் ஒரு பாதி ஓடிமுடிய அவரது காதலி கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன, அவர் நினைத்தபடி கொலைகாரனை கண்டுபிடித்து பழி வாங்கினாரா இல்லையா என்பது கதையின் மறுபாதி…
ராஜீவ் கோவிந்த் தன் உயரத்திலும் உடற்கட்டிலுமே கம்பீரம் காட்டுகிறார்; ஆத்திரம் கொப்பளிக்கும்போது அவரது அடி ஒவ்வொன்றும் எதிராளி மீது இடியாய் இறங்குகிறது. துக்கத்தை வெளிப்படுத்துவதிலும் ஸ்கோர் செய்கிறார். கதாநாயகியுடன் நெருக்கமான காட்சிகளில் பிளேபாய் லெவலுக்கு இறங்கி விளையாடியிருக்கிறார்.
கதைநாயகி யுக்தா பர்வி உணர்வு பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி, பாடல் காட்சியில் சதைநாயகியாக மாறி கவர்ச்சிப் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கிறார்.
சித்தாரா விஜயன், கதைநாயகனின் துக்கதில் பங்கெடுத்துக் கொண்டு அவரை மீட்டெடுக்கும் வேலையை சகோதரப் பாசத்துடன் சரியாகச் செய்திருக்கிறார்.
கிளைமாக்ஸில் ஹரிஷ் பெராடிக்கு ஏற்படும் நிலைமையைப் பார்க்கும்போது அவருக்கு துவக்கத்தில் கொடுத்த பில்டப் அதிகம் என்று தோன்றுகிறது. ஆனாலும் மகளை இழந்த துக்கத்தை வன்முறை வழியில் வெளிப்படுத்தும்போதும், அப்படி நடந்துகொணடது தவறு என உணரும்போதும் தேர்ந்த நடிப்பை பிரதிபலித்திருப்பதை பாராட்டலாம்.
சைக்கோ கொலைகாரன் பாத்திரத்தில் அபிஷேக் ஜார்ஜ். ஹீரோவையும் அவனது தங்கையையும் கட்டிப்போட்டு துன்புறுத்தியபடியே பிளாஷ்பேக்’கிற்கு ஆடியன்ஸை கூட்டிச் செல்லும்போது காட்டும் அதட்டலும் உருட்டலும் கச்சிதம்.
சீரியஸான காட்சிகளுக்கிடையில் ஶ்ரீநாத் விஜய் இசையிலமைந்த பாடல்கள் குளுமையான உணர்வுக்குள் இழுத்துப் போகின்றன. பின்னணி இசையில் குறையில்லை.
கதையின் சம்பவங்கள் நடக்கும் பசுமைப் பிரதேசத்தின் அழகை ஆதித்ய கோவிந்தராஜ் ஒளிப்பதிவில் ரசித்து அனுபவிக்கலாம்.
சிறுவயதில் நடந்த சாதாரண நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பால் ஒருவன் சைக்கோவாகிற ஒருவன், அவனிடம் சிக்கித் தவிப்பவர்கள் என கதை முழுக்க விறுவிறுப்பை ஏற்றி அதிரடியான கிரைம் திரில்லர் அனுபவம் தந்திருக்கிறார் இயக்குநர் சூரியன் ஜி.