நினைத்தாலே உயிரை உலுக்குகிற கொடூர கொலைகளையும், குரூர கற்பழிப்புகளையும் செய்த, இப்போதும் செய்வதாக சொல்லப்படுகிற தண்டுபாளையம் கொள்ளைக் கும்பலை மையப்படுத்தி, ‘மரண மாஸ் ரசிகர்களுக்கு மட்டும்’ என்று எச்சரித்து வெளியாகியிருக்கும் படம்.
ஆணும் பெண்ணுமாக எட்டுப் பத்து பேர் ஊர் முழுக்க சுற்றித் திரிகிறார்கள். ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத பகுதியிலுள்ள வீட்டைக் குறிவைக்கிறார்கள். சந்தர்ப்பம் பார்த்து நுழைந்து வீட்டிலுள்ளவர்களை கொடூரமாக கொலை செய்கிறார்கள். அங்குள்ள பெண்களை கடுமையாகத் தாக்கி ரத்த வெள்ளத்தில் கற்பழிக்கிறார்கள். பின்னர் நகை, பணத்தை எடுத்துக் கொண்டு எஸ்கேப்பாகிறார்கள். ஆள் நடமாட்டமில்லாத பகுதியிலுள்ள வீடுகளில் வேலைக்காரர்களாக சேர்ந்து, பின்னர் சந்தர்ப்பம் அமைந்ததும் அதே கொலை, கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.
காவல்துறை அவர்களை மடக்கிப்பிடித்து தண்டனை பெற்றுக் கொடுத்தால், அவர்களின் வாரிசாக அடுத்த கும்பல் கொலை, கொள்ளை கற்பழிப்பில் ஈடுபடுகிறது. அவர்களை வேட்டையாட புதிதாய் நியமிக்கப்பட்ட காவல்துறை தனிப்படை தலைமை அதிகாரி டைகர் வெங்கட், அந்த கும்பலை சாமர்த்தியமாக பிடித்து வினோதமான முறையில் அழிக்கிறார். அத்தோடு பிரச்சனை தீராமல், மற்றுமொரு கும்பல் அதே கொலை கொள்ளை செய்யவும், முந்தைய கும்பலை தீர்த்துக் கட்டிய அதிகாரியை கொன்றழிக்கவும் திட்டமிடுகிறது.
தங்கள் திட்டத்தை அவர்களால் நிறைவேற்ற முடிந்ததா இல்லையா என்பதை அதீத வன்முறைக் காட்சிகளோடும் அபாசமான கற்பழிப்புச் சம்பவங்களோடும் படமாக்கியிருக்கிற இயக்குநர் ‘டைகர்’ வெங்கட், காவல்துறை அதிகாரியாகவும் நடித்திருக்கிறார்.
சோனியா அகர்வாலும், வனிதா விஜயகுமாரும் ஆரம்பத்திலும் நிறைவிலும் வருகிறார்கள். காவல்துறை அதிகாரியையும் அவரது குடும்பத்தினரையும் தீர்த்துக் கட்டும் முயற்சியில் ரத்தவெறி பிடித்தவர்களாக மாறியிருக்கும் அவர்களின் டெரரான நடிப்பு மிரட்டலாக வெளிப்பட்டிருக்கிறது.
கொள்ளை கும்பலை பிடிப்பதில் காட்டும் வேகம், பிடித்தபின் தீர்த்துக் கட்டுவதில் சாமர்த்தியம் என அதிரடியான பங்களிப்பைத் தந்திருக்கிறார் டைகர் வெங்கட்.’
கொள்ளைக் கும்பலின் தலைவியாக வருகிற சுமன் ரங்கநாத், மகரந்த் தேஷ்பாண்டே, ரவிகாலே உள்ளிட்ட அவரது குழுவினர் அந்த கதாபாத்திரங்களுக்கு நல்ல தேர்வு. கண்களிலேயே கொலைவெறியைக் காட்டுவதோடு கொடூரத் தாக்குதல், ரத்தச்சகதி, கற்பழிப்பு என மனிதாபிமானமற்ற அத்தனை செயல்களையும் மரண பயம் காட்டும் விதத்தில் செய்திருக்கிறார்கள்.
சூப்பர் குட் சுப்ரமணி, பிர்லா போஸ் உள்ளிட்டோரும் இடையில் வந்து போகிறார்கள். முமைத்கான் கவர்ச்சியாக ஆட்டம் போடும் பாடல் உற்சாகமாக கடந்து போகிறது.
பின்னணி இசை, ஒளிப்பதிவு கச்சிதம்.
உருவாக்கத்தின் தரம் அப்படி இப்படி இருந்தாலும்,
‘கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் எப்படி வேண்டுமானாலும் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் நம்மை அணுகுவார்கள்’ என்பதை எடுத்துச் சொல்லி, ‘எப்போதும் எல்லோரிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்ற விழிப்புணர்வை விதைத்திருப்பதற்காக படக்குழுவை பாராட்டலாம். மென் மனதுக்காரர்கள் தவிர்த்து மற்றவர்கள் மனதை சற்று திடப்படுத்திக் கொண்டு பார்க்கலாம்.