அரசியல் பலத்தை வைத்துக்கொண்டு அடாவடி ராஜாங்கம் நடத்துபவர்களை இளைஞன் ஒருவன் தில்லாக எதிர்க்கும் கதை.
அமைச்சர் ஒருவர், தன் மகனைக் கொன்ற இளைஞன் ரஜினியை பழிவாங்க துரத்துகிறார். அவரிடமிருந்து தப்பிக்க ரஜினி தீட்டும் திட்டங்கள், அதற்கான பலன்கள் என இயக்குநர் ஏ வெங்கடேஷ் அமைத்திருக்கும் திரைக்கதை பரபரக்கிறது.
ரஜினியாக வருகிற விஜய் சத்யா தன் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்தவர்களை துவம்சம் செய்வதாகட்டும் அராஜமாக செயல்படும் அமைச்சருக்கு பாடம் புகட்டுவதாகட்டும் பொருத்தமான நடிப்பால் கதாபாத்திரத்தை பலப்படுத்தியிருக்கிறார். பரந்து விரிந்து பலமாக அமைந்த அவரது உடற்கட்டு அதிரடியான சண்டைக் காட்சிகளுக்கு வீரியமூட்ட உதவியிருக்கிறது.
தனுஷின் முதல் பட ஜோடி ஷெரின், இந்த படத்தில் ஹீரோ விஜய் சத்யாவின் மனைவி; ஒரு குழந்தைக்கு அம்மா. வயதில் முதிர்ச்சியடைந்துள்ள அவர் நடிப்பிலும் முதிர்ச்சி தெரியும்படி நடித்து, தனது இளமை தெரியும்படி பாடல் காட்சியில் அழகாக, அம்சமாக தோன்றியிருக்கிறார்.
நியாய தர்மத்தையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, சுயநலத்துக்காக எதையும் செய்யும் அரசியல்வாதியாக (இந்த படத்தின் இயக்குநர்) ஏ வெங்கடேஷ் தந்திருக்கும் மிரட்டலான நடிப்பிலும், அவருக்கு மனைவியாக வருகிற வனிதா விஜயகுமாரின் தெனாவட்டிலும் கதையோட்டத்துக்கு விறுவிறுப்பு கூடியிருக்கிறது.
போலீஸ் அதிகாரியாக நெஞ்சை நிமிர்த்தியபடி இடையிடையே வந்துபோகும் பிக்பாஸ் சம்யுக்தா படத்தின் நிறைவில் அடடே என்று நினைக்கும்படி கம்பீரமாக காட்சி தருகிறார். மற்றவர்களும் நடிப்பில் குறைவைக்கவில்லை.
பின்னணி இசையை சுறுசுறுப்பாக தந்து, ஒரு பாடலில் அதே சுறுசுறுப்போடு அசத்தலாக ஆட்டமும் போட்டிருக்கிறார் அம்ரிஷ். மனோ வி நாராயணாவின் ஒளிப்பதிவு கச்சிதம்.
அமைச்சர் கெட்டவராக இருக்கிற, அமைச்சரின் மகன் கேடுகெட்டவனாக இருக்கிற அரதப்பழசான கதைதான் என்றாலும் திரைக்கதையிலிருக்கிற கணிசமான விறுவிறுப்பு தில்ராஜாவை தூள் ராஜாவாக்கியிருக்கிறது!