‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படம் ஒரே இரவில் சென்சேஷனலாக மாறிவிட்டது என சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இந்த படக்குழுவில் பணியாற்றிய ஒவ்வொருவரும் இந்த வெற்றிக்காக நீண்ட காலம் சினிமாத் துறையில் போராடியுள்ளனர். அப்படி போராடியவர்களில் ஒருவரான தீபக், இயக்குநர் சிதம்பரத்தின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார்.
அதையடுத்து அவர், ‘சுதீஷ்’ என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என நம்பி வாய்ப்பளித்த இயக்குநருக்கும், படத்தைக் கொண்டாடி தன் நடிப்பை பாராட்டிவரும் ரசிகர்களுக்கும், குறிப்பாக தமிழக மக்கள் தந்த அபாரமான வரவேற்புக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தீபக் ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படம் மூலம் தனது சினிமா பயணத்தை 14 வருடங்களுக்கு முன்பு தொடங்கினார். ‘தட்டத்தின் மறையது’, ’தீரா’, ’ரேக்ஷாதிகாரி பைஜு’, ’கேப்டன்’ மற்றும் ’கண்ணூர் ஸ்குவாட்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.