மனித உணர்வுகள், சைபர் குற்றங்கள் பற்றிய சிக்கலான ஆய்வுகளை உள்ளடக்கிய திரைப்படம் ‘தில் ஹை கிரே.’ சுசி கணேசன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஊர்வசி ரவுடேலா, அக்ஷய் ஓபராய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் கடந்த செப்டம்பர் மாதம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பாராட்டுகளைக் குவித்தது.
தற்போது இந்த படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, ரெட் கார்ப்பெட் அங்கீகாரம் பெற்று பார்வையாளர்களிடம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
படம் முடிந்தபின் பார்வையாளர்கள், ‘பார்ட்-2 எப்போது வரும்?’ என்று கேட்டு கூச்சலிட்டு, படத்தின் திருப்பங்களுடன் கூடிய வலுவான கதைக்களத்திற்காக பெரு வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படத்தோடு ஒப்பிட்டுப் பேசினார்கள். இயக்குநர் சுசி கணேசன், முன்னணி நடிகர் அக்சய் ஓபராய் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தார்கள்.
அதையடுத்து நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில், ‘பார்ட் 2 எப்போது? என்று நீங்கள் கேட்பதே படத்தின் வெற்றிக்கு அடையாளம். இரண்டாம் பாகத்துக்கான கதையை விவாதித்துவிட்டோம். சரியான சந்தர்ப்பத்தில் தொடங்குவோம்’ என்றார்.
படம் பற்றி பேசிய அவர், ‘‘தினமும் சமூக ஊடகங்கள் தொடர்பான குற்றங்கள் நடக்கின்றன. தேவையற்ற தகவல்களை நாம் பகிர்ந்து கொள்வதால் தேவையில்லாத பிரச்சனைகளில் தங்கை, மனைவி என நமது குடும்பத்து பெண்கள் சிக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு படம் மட்டுமல்ல. சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தினால் வாழ்க்கையை எப்படித் தலைகீழாக மாற்றும் என்பதை உணர்த்தும் யதார்த்தமான பாடம்” என்றவர், சமூக ஊடகங்கள் நம் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் பேசினார்.
‘ஷாருக்கானுக்கு டர் போல உங்களுக்கு இந்த படம்’ என பார்வையாளர்கள் அக்சய் ஓபராயை பாராட்டினார்கள். அதையடுத்து அவரிடம் பெண் ரசிகர் ஒருவர், ‘படத்துல நிஜமான ஹாக்கர் போலவே இருக்கீங்க. அது எப்படி?’ என கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், ‘‘அந்தப் பெருமை சுசி சாருக்கே சேரும். தனது நடிகர்களிடமிருந்து சிறந்த நடிப்பை எப்படிப் பெறுவது என்பது அவருக்குத் தெரியும். எனது ஒவ்வொரு கண்ணசைவையும் தீர்மானித்தது அவரே” என்றார்.