காமெடி பேய்ப்பட வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான படம்.
அந்த இளைஞனுக்கு வழக்கத்துக்கு மாறாக தினமும் தூங்கும்போது ஒருவித கனவு வருகிறது. கனவில் அவன் ஒரு குறிப்பிட்ட பிரமாண்ட பங்களாவுக்கு போகிறான். அங்கு சிலபல அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டத்தை உணர்கிறான். கனவில் அவனுக்கு சட்டை கிழிகிறது. விழித்துப் பார்த்தால் நிஜத்திலும் சட்டை கிழிந்திருக்கிறது. கனவில் நெற்றியில் அடிபட்டு லேசாக ரத்தக்காயம் ஏற்படுகிறது. நிஜத்திலும் அதேபோன்ற ரத்தக்காயத்தோடு விழித்தெழுகிறான்…
நடப்பதையெல்லாம் பார்க்கும்போது அவனுக்கு, தான் ஏதோ பெரிய பிரச்சனையில் சிக்கியிருப்பதாக தோன்றுகிறது. பேய் விரட்டுவதில் தேர்ந்த ஒரு எக்ஸார்சிஸ்டை சந்திக்கிறான். அவர் பிரச்சனைக்கான காரணத்தைச் சொல்லி, தீர்வையும் சொல்கிறார்.
அவர் சொன்னபடி கனவுலகுக்குள் தன் குடும்பத்தினரை அழைத்துப் போகிறான். கூடவே தனக்கு கடன் கொடுத்த தாதா ஒருவரையும், மனநல மருத்துவர் ஒருவரையும் சேர்த்துக் கொள்கிறான். எல்லோருமாக கனவில் அந்த பங்களாவுக்குள் போய்ச் சேர்ந்து பேய்களின் பிடியில் சிக்குகிறார்கள். உயிருடன் வெளிவர முடியாத விபரீதம் உருவாகிறது.
படத்தின் முன்பாதி இப்படி நகர, அந்த சூழ்நிலையிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை பின்பாதியில் பார்க்க முடிகிறது.
நிஜமாகவே வித்தியாசமான கதையை எடுத்துக் கொண்டு, அதற்கு படு சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, ரசித்துச் சிரிக்கும்படியான காட்சிகளைக் கலந்துகட்டி இயக்கியிருக்கிறார் செல்வின் ராஜ் சேவியர்.
நாயகன் சதீஷ் இயல்பான நடிப்பால் கவர்கிறார். நாயகனுக்கு அப்பாவாக விடிவி கணேஷ், அம்மாவாக சரண்யா பொன்வண்ணன், மாமாவாக நமோ நாராயணன், மனநல மருத்துவராக ரெடின் கிங்ஸ்லி, தாதாவாக ஆனந்த்ராஜ் என அத்தனை கதாபாத்திரங்களும் தங்களின் சேட்டைகளால், பயத்தின் வெளிப்பாடுகளால் தங்களால் முடிந்தவரை சிரிப்பூட்டுகிறார்கள்.
எக்ஸார்சிஸ்டாக நாசர், ஆவியுலக ஆராய்ச்சியாளராக ரெஜினா கசான்ட்ரா இருவரிடமிருந்தும் கிடைத்திருக்கிறது கதைக்குத் தேவையான சரியான நடிப்புப் பங்களிப்பு.
பேய் வேடத்தில் நடித்திருப்பவர்களும் கவர்கிறார்கள்.
திகில் திரில்லர் கதைக்களத்துக்கு பொருத்தமான பின்னணி இசையை தந்திருக்கிறார் யுவன்சங்கர் ராஜா.
கலை இயக்குநர் மோகன மகேந்திரன் உழைப்பில் பேய் பங்களா நேர்த்தியாக உருவாகியிருக்கிறது.
கனவுலகம், நிஜ வாழ்க்கை என மாறிமாறி வந்துபோகும் காட்சிகளை கச்சிதமாக தொகுத்திருக்கிறார் எடிட்டர் பிரதீப் இ.ராகவ்.
வித்தியாசமான கதை, காமெடிக்கு குறைவில்லாத திரைக்கதை புதுவித அனுபவம் தருவதால் தாராளமாக பார்க்கலாம்; சிரித்தும் மகிழலாம்.