படு வித்தியாசமாக ஒரு பேய்ப்படம் எடுக்க வேண்டுமென நினைத்து, அதற்கேற்ப கதைக்களம் அமைத்து உருவாக்கப்பட்ட படைப்பு.
அடிக்கடி தன்னைத் தேடி தன் வீட்டுக்கு வருகிற இளம் கணவன், மனைவி ஜோடியைப் பார்த்து பயப்படுகிற சைத்ரா அவர்களிடமிருந்து தப்பிக்க தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த இளம்ஜோடி யார்? சைத்ரா அவர்களைப் பார்த்து பயப்பட என்ன காரணம்?
இந்த கதைக்கு எளிதில் யூகிக்க முடியாத முடிவை வைத்து, கதை அந்த முடிவுக்கு போகும்வரை சற்றே வித்தியாசமான சம்பவங்களை அரங்கேற்றியுள்ளார் இயக்குநர் ஜெனித்குமார்.
கதையின் நாயகி என்றாலும் யாஷிகா ஆனந்த்துக்கு படத்தில் ஒரேயொரு காஸ்ட்யூம் மட்டுமே. கவர்ச்சி காட்டுவதற்காக வாய்ப்பு இல்லவே இல்லை. படத்தின் முன்பாதியில் ஒருசில நிமிடங்கள் மட்டுமே எட்டிப் பார்த்துவிட்டு நகர்ந்துபோகும் அளவுக்கே திரைக்கதை இடம்கொடுத்துள்ளது. பின்பாதியில் சில காட்சிகளில் வந்து கண்கலங்குகிறார், ஒருசில நிமிடங்கள் பேயாகவும் தோன்றி மறைகிறார். குறிப்பிட்டுச் சொல்லும்படி எதையும் செய்யவில்லை. அவர் மீது குறையில்லை; கதைக்களம் செய்யவிடவில்லை!
நாயகியின் தோழியாக, டிடெக்டிவாக வருகிற சக்தி மகேந்திராவின் விழிகளில் இருக்கும் படபடப்பும் நடிப்பிலிருக்கும் துடிப்பும் கவனிக்க வைக்கிறது.
நாயகியின் கணவராக அவ்தேஜ், ஜூனியர் சாமியாராக மொசக்குட்டி ராஜேந்திரன், காவல்துறை அதிகாரியாக கண்ணன், டாக்டராக படத்தின் இயக்குநர் ஜெனித்குமார் என மற்ற நடிகர்களின் பங்களிப்புக்கு பாஸ்மார்க் போடலாம்.
சாமியார் ஒருவரைப் பற்றி பெரிதாக பில்ட் அப் கொடுத்து, கடைசியில் அவரை தண்ணீரில் மூழ்கடித்த பட்டாசாக்கியிருக்கிறார்கள்.
பின்னணி இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட சங்கதிகள் எளிமையான பட்ஜெட்டுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.
கிளைமாக்ஸ் எதிர்பாராத விதத்தில் திருப்பங்களுடன் கடந்தோடுவது படத்தின் பிளஸ். வித்தியாசமான படத்தை எடுக்க வேண்டும் என நினைத்த இயக்குநர், அதை மக்கள் ரசிக்கும்படி எடுக்க வேண்டும் என யோசிக்கத் தவறியிருப்பது மைனஸ்.