இரண்டு இளைஞர்களையும் ஒரு பெண்ணையும் சுற்றிச் சுழல்கிற, 1998 காலகட்டத்தில் நடக்கிற முக்கோண காதல் கதை.
தான் காதலிக்கும் செந்தாமரை, தன்னைக் காதலிக்கவில்லை என்பது தெரிந்தபின்னரும், அவளை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறான் சிவா.
செந்தாமரை சூர்யாவை காதலிக்கிறாள்; அவனிடம் காதலை சொல்கிறாள்.
சிவா செந்தாமரையை காதலிப்பதால், அவளது காதலை சூர்யா நிராகரிக்கிறான்.
ஒரு கட்டத்தில் செந்தாமரைக்கு கல்யாணம் நடக்கிறது. அது யாருடன் நடக்கிறது என்பதும், அதன் பின் நடக்கும் சுக துக்கங்களுமே கதையின் மீதி… இயக்கம் சகாயநாதன்
சிவாவாக மகேஷ்; சூர்யாவாக டாக்டர் டிட்டோ.
பள்ளிப் பருவம், கல்லூரிப் படிப்பு, அதை தாண்டிய ஒன்றிரண்டு வருடங்கள் என வெவ்வேறு காலகட்டத்துக்கேற்ற தோற்ற மாற்றங்களுடன் வருகிற இருவரில், காதல் தோல்வியின்போது பரிதாப முகபாவம் காட்டி, கிளைமாக்ஸில் வில்லனாக மாறி கவனம் ஈர்க்கிறார் மகேஷ்.
லட்சணமான முகவெட்டுடன் படு இளமையாக, பளீர் நிறத்தில் வருகிற டாக்டர்.டிட்டோவின் நடிப்பு கச்சிதம்.
அழகும் இளமையும் நிரம்பித் ததும்பும் தீப்ஷிகா, தன்னைக் காதலிப்பவனும் சரி, தான் காதலிப்பவனும் சரி தன்னுடைய உணர்வை புரிந்து கொள்ளாமல் அவரவர் மனம்போன போன நடந்து கொள்ள, அதனால் கலக்கமடைவதும், பின் வெறொருவனை மணந்துகொள்ள சம்மதிப்பதுமாய் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த தன் பாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.
செந்தாமரையோடு மணவாழ்வில் இணைய ஆசைப்பட்டு, ‘உனக்கும் இல்ல; அவனுக்கும் இல்லன்னு ஆகிடுச்சு. நான் பட்டா போட்டுக்கலாமா?’ என்கிற ரேஞ்சுக்கு நண்பனிடம் பர்மிஷன் கேட்டு சாப்ளின் சுந்தர் அடிவாங்குவது கலகலப்பூட்டுகிறது.
பள்ளிக்கூட காட்சிகளில் ஆசிரியர்களாக அட்டனனஸ் போட்டிருக்கிறது ஜாங்கிரி மதுமிதா, சாம்ஸ் கூட்டணி.
டி எஸ் முரளிதரன் இசையில் புன்னகையில் பூ பறிக்கும்’ டூயட் பாடல் மனதைப் பறிக்கிறது. ‘கட்டு கட்டு கமர்கட்டு’ பாடலில் ஆட்டம் போட்டிருக்கும் ‘மஸ்காரா’ அஸ்மிதா அத்தனை ஸ்லிம்மாக இருப்பது இந்த படத்தை எடுத்து பல வருடங்கள் ஆகியிருப்பதை தெரியபடுத்துகிறது.
பாடல்கள் படமாக்கப்பட்ட இடங்கள் பால் லிவிங்ஸ்டனின் ஒளிப்பதிவில் கண்களுக்கு புத்துணர்ச்சி தருகிறது.
இப்போதெல்லாம் காதலிப்பது, காதலர்கள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்வது, சட்டென பிரேக் அப் சொல்லி பிரிவதெல்லாம் சாதாரணமாகியிருக்கிறது. சற்றே 20, 30 வருடங்கள் திரும்பிப் பார்த்தால் நிலைமை தலைகீழாக இருந்திருக்கிறது. அந்த மலரும் நினைவுகளைக் கிளறிவிடுகிற இந்த படைப்பின் உருவாக்கத்திலிருக்கும் சில குறைகளைப் பொருட்படுத்தாவிட்டால், தூக்கிக் கொஞ்சத் தகுந்த வெல்லக்கட்டிதான் இந்த செல்ல குட்டி