சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட பலர் நடிக்க, 2கே கிட்ஸிற்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் இடையேயான தலைமுறை இடைவெளியை மையப்படுத்தி, ‘திறந்திடு சீசே’ பட இயக்குநர் எம். முத்து இயக்கியிருக்கும் படம் ‘சிக்லெட்ஸ்.’
இந்த படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே சமயத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னதாக இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது. மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநர்களும், நடிகர்களுமான ஆர். வி. உதயகுமார், பேரரசு, ‘மஞ்சள் வீரன்’ பட இயக்குநர் செல்லம், நடிகரும் தொழிலதிபருமான சூரிய நாராயணன், நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நடிகை அமிர்தா ஹல்தார் இயக்குநர் எம். முத்து, ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார், தயாரிப்பாளர் ஏ. சீனிவாசன் குரு கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்வர்ணா ஸ்ரீ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்
இயக்குநர் எம். முத்து பேசுகையில், ”இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே தருணத்தில் இயக்கி இருக்கிறேன்.
பெற்றோர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் இருக்கும் அன்பு.. ஒரு காதலனுக்கும் காதலிக்கும் இருக்கும் அன்பு.. இந்த அன்பு ஒருவரிடம் சேரும்போது வாழ்க்கையில் தோல்வி இருக்காது. வெற்றி பெறுவோம். ஆனால் அந்த அன்பு தோற்று விட்டால்.. வாழ்க்கையில் தோற்று விடுவோம் . பெற்றோர்களைப் பற்றி பிள்ளைகள் புரிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளை பற்றி பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
டூகே கிட்ஸ் என்றால்… நான் இந்த தலைமுறையை தவறு சொல்லவில்லை. தற்போது கலாச்சாரம் மாறி இருக்கிறது. அதற்கேற்பதான் அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். கலாச்சாரம் மாற மாற அதனால் பாதிப்பை சந்திப்பவர்கள் இளைய தலைமுறையினர் தான். வேறு யாரும் அல்ல.
பெற்றோர்களாகிய நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஏனெனில் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறை என்பது வேறு. தற்போதுள்ள இளைய தலைமுறையினர் வாழும் வாழ்க்கை வேறு. இதைப் பற்றி ஓப்பனாக பேசப் போனால்.. எங்களுக்கு கிடைத்திருக்கும் சர்டிபிகேட் ‘ஏ’.
இதை ஓப்பனாக யார் பேசுவது? சமுதாயம் பேசாது. ஏனெனில் அதற்கு ஒரு பயம் இருக்கிறது. பிறகு யார் தான் பேசுவது? பெற்றோர்கள் தான் இது குறித்து அவர்களுடைய பிள்ளைகளிடம் பேச வேண்டும். இது செய்.. இது செய்யாதே.. இது சரி.. இது தவறு.. இதை சொல்லக்கூடிய ஒரே உரிமை பெற்றோர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது.
எல்லோருக்குள்ளும் ஒரு ரகசியம் இருக்கிறது. அதை வெளியில் சொன்னால் தப்பாகி விடும் என்பதற்காக தமக்குள்ளே வைத்துக் கொண்டவர்கள் தான் 80’ஸ் 90’ஸ் காலகட்டத்தினர். ஆனால் மனதில் நினைத்ததை வெளிப்படையாக பேசுபவர்கள் தான் இன்றைய இளம் தலைமுறையினர். தவறு என்று தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் பேசுவார்கள். தவறு என்றால் திருத்திக் கொள்ளலாம். ஆனால் மனதில் பட்டதை பேசாமல் அவர்களால் இருக்க முடியாது.
அவர்களுடைய பேச்சு எப்படி இருக்கும்? அணுகுமுறை எப்படி இருக்கும்? காதல் எப்படி இருக்கும்? காமம் எப்படி இருக்கும்? அவருடைய மனநிலை எப்படி இருக்கும். இவை எல்லாவற்றையும் இப்படத்தில் பேசியிருக்கிறோம். அதே சமயத்தில் பெற்றோர்களின் வலியையும் பேசியிருக்கிறோம்.
பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் வாழ்க்கையில் தோற்கக் கூடாது என்று தான் நினைப்பார்கள். அனைத்து பெற்றோர்களின் மனதிலும் இவைதான் இருக்கும். ஆனால் அதை ஒருபோதும் பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
‘எப்படி வேண்டுமானாலும் வாழு. ஆனால் வாழ்க்கையில் நீ சிறந்தவனாக வெற்றி பெற வேண்டும்’ என்று சொல்லிப் பாருங்கள். பிள்ளைகளின் மனதிற்குள் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தப் படத்தில் நாங்கள் ஒரு நல்ல விசயத்தைத்தான் சொல்லி இருக்கிறோம்.
இப்படத்திற்கு பிரபலமானவரின் பின்னணி குரல் அவசியம் என்பதை உணர்ந்தோம். இதற்காக இயக்குநர் ‘லெஜன்ட்’ பாக்யராஜை தொடர்பு கொண்டோம். அவர் படத்தை பார்த்துவிட்டு சில நிறைகுறைகளை சுட்டிக்காட்டினார். அவர் பார்க்கும் போது இந்த படத்தின் கால அவகாசம் இரண்டரை மணி நேரம். அவர் சுட்டிக் காட்டிய குறைகளை நீக்கிய பிறகு இரண்டு மணி நேர படமானது. 30 நிமிட காட்சிகளை நீக்கி விட்டோம். இதற்காக இயக்குநர் பாக்கியராஜுக்கு நன்றி.
இந்தப் படத்தின் கிளைமாக்ஸை என்னுடைய உதவியாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. படத்தில் இடம் பெறும் மூன்று கதாபாத்திரங்களுக்கும் நியாயப்படுத்தும் வகையில் கிளைமாக்ஸ் இருந்தது. தயாரிப்பாளருக்கு நான் சொன்ன கிளைமாக்ஸ் பிடித்திருந்தது. பாக்யராஜ் சாரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார். கண்டிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ்.. படம் வெளியான பிறகு பேசப்படும். மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன். கிளைமாக்ஸ் புதிது இல்லை என்றாலும்.. இது இருந்தால்தான் பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும். இது யாருக்குத் தேவை? யாருக்கு தேவை இல்லை? என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறோம். எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை.
நம்மால் ஒரு விசயத்தை சாதிக்க முடியும் என்று நினைப்பவர்களுக்கு… இந்த சமுதாயத்தை எதிர்த்து வாழ முடியும் என்று நினைப்பவர்களுக்கு.. யாருடைய ஆதரவும் தேவையில்லை. ஒருத்தருடைய ஆதரவில் தான் மற்றவர்களால் வாழ முடியும் என்றால்.., நிச்சயமாக அவர்கள் ஆயுள் முழுவதும் அடுத்தவர்களை சார்ந்து தான் வாழ்வார்கள். இதைத்தான் நான் இப்படத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறேன்” என்றார்.
படக்குழு: கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். ராஜு கலை இயக்க பணிகளை மேற்கொள்ள, விஜய் வேலுக்குட்டி படத் தொகுப்பை கவனித்திருக்கிறார்.