எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் பேசிக் கொண்டிருக்கும் கார்த்திக்கால் அவரது பெற்றோருக்கு பல விதங்களில் மன உளைச்சல். கார்த்திக்கின் அக்கா, பிரதரை அதாவது தம்பியை தன்னுடன் கொஞ்ச நாள் வைத்திருந்து, அவனது போக்கை மாற்றலாம் என நினைத்து அழைத்துப் போகிறார். கார்த்திக் அங்கும் மனம்போன போக்கில் நடந்து கொள்ள அக்கா, தன் கணவரைப் பிரிகிற சூழ்நிலை உருவாகிறது.
அதை பார்த்து மனம் கலங்கும் கார்த்திக் தன் இயல்பை மாற்றிக் கொள்ளவும், அக்காவை கணவருடன் சேர்த்து வைக்கவும் முயற்சிக்கிறான். அவனால் அவனை மாற்றிக் கொள்ள முடிந்ததா, அக்காவை கணவருடன் சேர்த்து வைக்க முடிந்ததா என்பதெல்லாம்தான் மீதிக் கதை… இயக்கம் ராஜேஷ் எம்
கார்த்திக்காக ஜெயம் ரவி. அடிதடி, வன்முறை என ஹீரோயிஸம் காட்டாமல் அமைதியாக நடிக்கும்படியான கதாபாத்திரம். ரசித்தும் பாத்திரத்தின் தன்மையுணர்ந்தும் எளிமையாக நடித்துள்ளதோடு பட ரிலீஸுக்கு முன்பே ஹிட்டாகிவிட்ட மக்காமிஸி பாடலுக்கு அசத்தலாக ஆட்டமும் போட்டிருக்கிறார்.
ஹீரோவை காதலிப்பது, பாடல் காட்சியில் கலர்ஃபுல்லாக உடையணிந்து ஆடுவது என்ற இரு வேலைகளையும் சரியாக செய்திருக்கிறார் பிரியங்கா மோகன்.
தம்பி மீது பாசம் பொழியும் அக்காவாக பூமிகாவின் பங்களிப்பு நேர்த்தி. ஈகோ’யிஸ்டாக வருகிற ராவ் ரமேஷும் சற்றே கவனிக்க வைக்கிறார்.
விடிவி கணேஷுக்கான காட்சிகளும் வசனங்களும் கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைக்கிறது.
நட்டி நட்ராஜ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன் என பலரும் அப்படியும் இப்படியுமாக நடமாடியிருக்கிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மக்காமிஸி பாடல் அசத்தல். இன்னொரு பாடலும் மனதைக் கவர்கிறது. பின்னணி இசையில் குறையுமில்லை; குறிப்பிட்டுச் சொல்ல ஸ்பெஷலாக எதுவுமில்லை.
படத்தில், ‘ஒருவனிடம் அநியாயங்களை தட்டிக் கேட்கிற இயல்பு இருந்தால் அது அவனது பலவீனமல்ல; பலம்’ என்கிற மேஸேஜ் படத்தில் இருக்கிறது. அதற்கேற்ற வலுவான கதையும் அதை பலப்படுத்தும்படியான திரைக்கதையும் இருந்திருக்கலாம்.