குழந்தைகளைக் குஷியாக்கும்படி, அந்த குழந்தைகளைப் பெற்றோரும் ரசிக்கும்படி உருவாகியுள்ள அனிமேஷன் படம். பூனி பியர்ஸ் தொடரில் வெளியாகும் 9-வது படைப்பு.
ப்ரையர், ப்ராம்பிள் இரண்டும் சிறு வயதில் அன்பான அம்மாவை பிரிந்த கரடிகள். அவை வளர்ந்து ஆளானபின் தங்களின் அம்மாவை சந்திக்க நேர்கிறது. அம்மாவும் பிள்ளைகளும் அன்பைப் பரிமாறிக்கொள்ள, அடுத்தடுத்த நாட்கள் முழுக்க அவர்களின் வாழ்வில் சந்தோஷம் கரைபுரள்கிறது.
அந்த சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக; ‘பிள்ளை கரடிகளின் தாய்க் கரடி நிஜக் கரடியல்ல; அது நிஜக் கரடியின் தோற்றத்தில் இருக்கிற ரோபோ’ என்பது தெரிகிறது. அந்த ரோபோவுக்கும் நிஜ கரடிகளுக்கும் சில தீய மனிதர்களால் ஆபத்து சூழ, அதிலிருந்து தப்பிப்பதற்கான போராட்டம் தொடங்குகிறது. அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றது யார் என்பதே கிளைமாக்ஸ்.
ரோபோ கரடியை உருவாக்கியவர்கள் யார்? நிஜக் கரடிக்கு நடந்தது என்ன என்பதெல்லாம் பிளாஷ்பேக். அந்த பிளாஷ்பேக்கில் கரடிக் குட்டிகளுக்கும் ரோபோ கரடிக்குமான பாசப்பிணைப்புக் காட்சிகள் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.
விஞ்ஞானிகள், அவர்களின் ஆராய்ச்சிகள் என கடக்கும் காட்சிகளில் நடககும் சம்பவங்கள் கரடிகள் நிகழ்த்தும் சாகசங்கள் அனைத்தும் ஆச்சரியப்படுத்துகின்றன. கரடிகள் மட்டுமல்லாது மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்களும் கவனிக்க வைக்கிறார்கள்.
Lin Yongchang, Shao Heqi இருவரும் இணைந்து இயக்கியிருக்கிற இந்த படத்துக்கு, உங்கள் வீட்டு குட்டிச் சுட்டிகளை கூட்டிப்போனால் அவர்கள் உற்சாகத்தில் மிதப்பது உறுதி!