யோகிபாபு காமெடியனாக நடித்திருக்கும் மற்றுமொரு படம்.
யோகிபாபுவின் மனதில் இடம்பிடித்து கணவனாக்கிக் கொள்கிறாள் அந்த ரஷ்யப் பெண். ஒரு கட்டத்தில் யோகிபாபு அவளிடமிருந்து டைவர்ஸ் கேட்க, அதற்கு சம்மதிக்கும் அவள்; ஊரிலுள்ள யோகிபாபுவின் வீட்டில் ஒரு நாள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறாள். அதன்படி அவளுடன் தனது அரண்மனை போன்ற பிரமாண்ட வீட்டுக்கு போய்ச் சேர்கிறார். போனபின் அங்கு அமானுஷ்யமாக நடக்கும் சிலபல விஷயங்கள் யோகிபாபுவின் மூளையைக் குழப்பிவிட, அறிவியல் ஆராய்ச்சி அதுஇதுவென இன்னொரு பக்கம் அந்த ரஷ்யப் பெண் ஏதேதோ செய்கிறார்.
விபரீதத்தில் சிக்கிக் கொண்டோம் என்பது யோகிபாபுவுக்கு தெரிகிறது. அதிலிருந்து அவரால் தப்பிக்க முடிந்ததா இல்லையா என்பதே கதையோட்டம்…
உண்மையில் அந்த ரஷ்யப் பெண் யார்? எதற்காக யோகிபாபுவுக்கு மனைவியானாள்? அரண்மனையில் நடக்கும் அமானுஷ்ய சங்கதிகளின் பின்னணி என்ன? அங்கு நடக்கும் அறிவியல் ஆராய்ச்சி எந்தவிதமான விளைவுகளை உருவாக்கக்கூடியது? இப்படியான பல கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில் இருக்கிறது… இயக்கம் ஸ்வதேஷ்
யோகிபாபு தன் பாணியில் ஓரளவு கேலி கிண்டல் கேலி வசனம் பேசி ஒப்பேற்றியிருக்க, ஓவியா பேய் போலவும் தொழில்நுட்பத்தில் உருவான மாயத்தோற்றத்திலும் வருவது கவனிக்க வைக்கிறது. பாடல் காட்சியொன்றில் கணிசமான கவர்ச்சியும் காட்டியிருக்கிறார்.
(சில தினங்கள் முன் மறைந்த) சேஷு கோமாளிபோல் முகம் முழுக்க வர்ணம் பூசிக் கொண்டு பளபளப்பான பெண்ணைக் காதலிக்க வட்டமிட்டு திட்டமிடுவது ஓரளவு சிரிப்பூட்டுகிறது.
ஊர் நாட்டாமையான ரோபோ சங்கர் ஹல்க் போல் உருமாறி வில்லன் போல் அதகளப்படுத்த, சக்திமான் போல் சில நிமிடங்கள் வருகிற எம் எஸ் பாஸ்கர் தேர்ந்த நடிப்பைத் தந்து போகிறார்.
கே பி ஒய் பாலா, பழைய ஜோக் தங்கதுரை இருவரும் கலகலப்பு ஏரியாவில் இணைந்து பிணைந்து களமாடியிருக்கிறார்கள்.
அயல்நாட்டுப் பெண்ணாக வருகிறவரின் பங்களிப்பில் குறையில்லை. சீனியர் நடிகை சோனாவும் படத்திலிருக்கிறார்.
சிறுவர் சிறுமிகள் இணைந்தாடும் ஜிங்கா புங்கா பாடல் உங்கள் வீட்டு குட்டிச் சுட்டிகளை உற்சாகமாக்கும்.
சுபாஷ் தண்டபாணியின் ஒளிப்பதிவு கச்சிதம்.
பிரமாண்ட அரண்மனை, டெக்னிகல் சமாச்சாரங்கள் என கலந்திருக்கும் கதைக்களத்தை மெருகேற்ற சிரத்தையாய் உழைத்திருக்கிறார் கலை இயக்குநர் பி ஆனந்த்.
ரஷ்யப் பெண் ஒருவர் குறிப்பிட்ட ஒரு அறிவியல் தொழில்நுட்பத்தை அபகரிக்கத் திட்டமிட்டு, தமிழ்நாட்டு ஆசாமியொருவரை கல்யாணம் செய்துகொள்ளும்படியான விறுவிறுப்பான கதைக்களத்தை தேர்ந்தெடுத்த இயக்குநர் அதில் நடிக்க யோகிபாபு, ஓவியா என பெரிய நடிகர் நடிகைகளைப் வளைத்துப் பிடித்ததெல்லாம் சாமர்த்தியம்தான். ஒத்துக் கொள்ளலாம்.
‘திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் பூமர் அங்கிளுடன் ரசிகர்கள் மிங்கிள் ஆகியிருப்பார்கள்’ என்பதை இயக்குநரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.