‘வித்தியாசமான கதைக்களம்; காமெடி கலந்த உருவாக்கம்’ என தான் இயக்கும் படங்களின் மூலம் தனி அடையாளத்தை தக்க வைத்திருக்கிற சிம்புதேவன், இந்த முறை காமெடியை தள்ளி வைத்துவிட்டு சீரியஸான கதையோடு ‘போட்’டில் ஏறியிருக்கிறார்.
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த 1943 காலகட்டம். சென்னையில் ஜப்பான் போர் விமானங்கள் வீசும் குண்டுகளில் இருந்து தப்பிக்க மீனவர் யோகிபாபு தன் பாட்டியோடு கடலுக்குள் செல்ல போட்டை நகர்த்துகிறார். அந்த சமயமாகப் பார்த்து ஒரு இளைஞன், ஒரு கர்ப்பிணி, ஒரு சிறுவன், ஒரு முதியவர், ஒரு இளம் பெண், ஒரு பிராமண பெரியவர் என சிலர் ஓடி வந்து போட்டில் ஏறிக் கொள்கிறார்கள். போட் கடலில் வெகுதூரம் போன நிலையில் பிரிட்டீஷ் காவல் துறை அதிகாரி ஒருவர் போட்டில் தாவியேறுகிறார். அவர் கையில் துப்பாக்கி.
கதை இப்படி சூடுபிடிக்க, போட்டில் சிறியளவில் சேதாரம் ஏற்பட்டு தண்ணீர் உள்ளே வர, யாரேனும் 3 பேர் போட்டிலிருந்து இறங்கினால் மட்டுமே மற்றவர்கள் உயிர் பிழைக்க முடியும் என்ற சூழ்நிலை.
நெருக்கடியான அந்த சூழ்நிலையில் யார் யார் எப்படி நடந்து கொள்கிறார்கள்? உயிர்த் தியாகம் செய்ய யார் யார் முன் வந்தார்கள்? போலீஸ்காரரின் துப்பாக்கிக்கு என்ன வேலை? என்பதெல்லாம் திரைக்கதையில்…
யோகிபாபுவின் தோற்றத்தில் மீனவர் என்பதற்கேற்ப மிகச்சிறிய மாற்றமிருக்கிறது. மற்றபடி நடிப்பில் சொல்லிக் கொள்ளும்படியான மாற்றமோ ஏற்றமோ இல்லை. கதை சீரியஸாக அமைந்து விட்டதால், யோகிபாபுவுக்கு தன் பாணியிலான காமெடி பங்களிப்பை பெரிதாய் பரிமாற வாய்ப்பில்லை. உணவில் வைக்கும் ஊறுகாய் அளவுக்கு கொஞ்சம் கொஞ்சம் இளைப்பாறுதல் மட்டுமே தர முடிந்திருக்கிறது.
கெளரி கிஷன் உடையலங்காரத்தால் பிராமணப் பெண்ணாக மாறி, பயம், பதற்றம், காதல் என கதம்பமாக உணர்வுகளை வெளிப்படுத்த கண்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்.
சாதிப் பாகுபாடு அது இதுவென பலவற்றில் மனிதர்கள் சக மனிதர்களுக்கு எதிரிகளாக இருக்கிற அவலத்தை சுட்டிக் காட்டி, ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் சரிசமமாக வெளிப்படுத்தும் எம் எஸ் பாஸ்கர், பிராமணராக மேல்தட்டு மனோபாவத்தை அதற்கான திமிரோடு பரிமாறியிருக்கிற சின்னி ஜெயந்த், கர்ப்பிணிப் பெண்ணாக மதுமிதா, சேட் வேடத்தில் சாம்ஸ், எழுத்தாளராக ஷாரா, யோகிபாபுவின் பாட்டியாக குலப்புள்ளி லீலா, காவல்துறை அதிகாரியாக ஜெஸ்ஸி என போட்டில் தஞ்சமடைந்தவர்கள் நடிப்பில் நெஞ்சைத் தொடாவிட்டாலும், இயக்குநர் சொன்னதை சொன்னபடி செய்திருப்பதை உணர முடிகிறது.
கடலின் பிரமாண்டத்தை அழகு குறையாமல் காண்பித்திருக்கிற மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, காட்சிகளின் தன்மைக்கேற்ற ஜிப்ரானின் பின்னணி இசை போட்டுக்கு பொருத்தமான துடுப்பாக மாறியிருக்கின்றன.
சமூக அக்கறைக் கருத்துகளை வசனங்கள் வழியாக வாரி வழங்கிய இயக்குநர் திரைக்கதையில் கூடுதல் சுவாரஸ்யத்தை, உயிரோட்டத்தை புகுத்தியிருந்தால் போட்’டின் பாய்ச்சல் வீரியமாய் இருந்திருக்கும்.