கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி அதில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வை, விளையாட்டில் சாதிக்க நினைக்கும் எளிமையானவர்களின் போராட்டத்தை, அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் தேர்வுக்குழு அதிகாரிகளின் கேவலமான முகத்தை என பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் படம்.
90களில் நடக்கும் கதை. கிரிக்கெட் விளையாட்டில் அசோக் செல்வனும் அவரது தம்பி பிரித்வியும் புளூ ஸ்டார் என்ற அணியிலிருந்து சாந்தனுவின் தலைமையிலிருக்கும் ஆல்பா அணியை எதிர்ப்பது களம் காண்பதும் விளையாட்டில் மட்டுமல்லாது ஒரு அணியை இன்னொரு அணி நிஜத்திலும் எதிரியாக நினைத்து முறுக்கிக் கொண்டு திரிவதும் வழக்கம்.
எளியவர்களின் அணிகளை, ஒரு சில சதிகாரர்களின் தூண்டுதலால் வெளியூர் கிரிக்கெட் வீரர்கள் சிலர் பந்தாட்ட மைதானத்தில் பதம் பார்க்கிறார்கள்.
எளியவர்களான அவர்களை பெரியளவிலான போட்டிகளில் பங்கேற்க விடாமல் சிலபல தகுதிகளையும் சாதியையும் காரணம் காட்டி தேர்வுக் குழுவினர் தடுக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல் புளூ ஸ்டார் அணியும் ஆல்பா அணியும் இணைந்து, தங்களை வீழ்த்த நினைப்பவர்களுக்கு எதிராக களத்தில் இறங்குகிறார்கள். ஆடுகளம் போர்க்களமாகிறது. அதில் வெற்றி யாருக்கு என்பது மிச்சமீதி கதை.
கதையின் நாயகர்களான அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி மூவரும் சண்டை சச்சரவு, போட்டி பொறாமை, ஆத்திர ஆவேசம் என அனைத்திலும் 90களின் இளைஞர்களாகவே மாறியிருக்கிறார்கள். அவர்கள் நிஜத்திலும் கிரிக்கெட் வீரர்கள் என்பதால் பந்தாட்டத்தில் தெறிக்க விடுகிறார்கள். தியேட்டரில் விசில் பறக்கிறது.
போட்டி மனப்பான்மையில் விரோதிகளாக மாறியிருக்கும் புளூ ஸ்டார், ஆல்பா அணி இளைஞர்களை மனதைப் பக்குவப்படுத்தி, விளையாட்டின் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து வழிநடத்தும் கனமான கதாபாத்திரத்தில் பக்ஸ் பெருமாளின் நடிப்பு தனித்து தெரிகிறது.
கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன் மீது காதல்கொண்டு கைப்பிடித்து பழகி, தோள் சாயும் தருணங்களை அலட்டலற்ற நடிப்பால் அழகாக்கியிருக்கிறார்.
பிரித்வியின் காதலியாக ஒருசில காட்சிகளில் ஒருசில விநாடிகள் வந்துபோகிறார்.
அசோக் செல்வனின் பெற்றோராக குமரவேல், லிஸி ஆண்டனி, கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடும் இளவட்டங்கள், சாதிவெறி பிடித்த கிரிக்கெட் பயிற்சியாளர் என மற்ற பாத்திரங்களில் அத்தனைப் பேரும் கதாபாத்திரங்களுக்கு சரியாய் பொருந்தி நடித்திருக்கிறார்கள்.
கோவிந்த் வசந்தாவின் தாலாட்டும் இசையில் ரயிலின் ஒலிகள்’, ரயிலைத் தள்ளும் மேகமே’ பாடல்களைக் கேட்டு உருகலாம். பெரும்பாலான காட்சிகள் விளையாட்டு மைதானமும் பந்துகள் சீறிப் பாய்வதுமாகவே கடந்தோட அவற்றை அதிரடியான பின்னணி இசையால் பலப்படுத்தியிருக்கிறார்.
தமிழ் அ அழகனின் ஒளிப்பதிவில் கதைக்களமான அரக்கோணம் அதன் தன்மை மாறாமல் பதிவாகியிருக்கிறது.
படத்தின் நீளம் சற்றே அதிகமாக தோன்றினாலும் அதற்கேற்ற அர்த்தமுள்ள காட்சிகள் அணிவகுப்பதால் ரசிக்க முடிகிறது.
90களின் காலகட்டத்தை காட்சிகளில் கொண்டு வருவதற்காக சிரத்தையாய் உழைத்திருக்கிற ஒட்டு மொத்த படக்குழுவுக்கும் ஸ்பெஷல் பாராட்டு!
உருவாக்கத்திலிருக்கும் தரத்தினால் புளூ ஸ்டார், ஸ்போர்ட்ஸ் படங்களில் ரியல் ஸ்டாராய் உயர்ந்து நிற்கிறது!