மக்களுக்கு கதை புரியுமா புரியாதா? பிடிக்குமா பிடிக்காதா? வெற்றி பெறுமா பெறாதா? இப்படி எதைப் பற்றியும் யோசிக்காமல், தனக்கு வித்தியாசமாக படம் எடுக்கத் தெரியும் என்பதை நிரூபிப்பதற்காக மட்டுமே சிலர் படம் இயக்குவதுண்டு. அந்த வரிசையில் இணைவதற்காக வரிந்துகட்டி களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் ராகுல் கபாலி
ஜெகதீஷ் 25 வருடங்களில் 96 கொலைகள் செய்ததற்காக சிறையிலிருப்பவன். அவனைப் பற்றி, அவன் ஏன் அத்தனை கொலைகள் செய்தான் என்பது பற்றி தெரிந்துகொண்டு, கதையாக எழுதும் நோக்கத்துடன் அவனை எழுத்தாளர் ஒருவர் சந்திக்கிறார். ஜெகதீஷ் அவரிடம், நடந்தது என்ன?’ என்பதை சொல்லச் சொல்ல அந்த சம்பவங்கள் காட்சிகளாக விரிவதே கதையின் போக்கு…
இது ஒருபுறமிருக்க, புத்தகமொன்றில் ஜெகதீஷ் பற்றி படிக்கும் வாசகர்கள் தாங்களே ஜெகதீஷாக மாறுவதும், கொலைகள் செய்வதுமாக தொடர்கிறது திரைக்கதையின் மற்றொரு டிராக்.
கொலைகளைக்கூட கலையாக செய்கிற ஜெகதீஷாக புதுமுகம் ஜெடி. பெரும்பாலான காட்சிகளை வசன உச்சரிப்பால் மட்டுமே நகர்த்த வேண்டியிருக்க அவரிடமிருந்து அதற்கேற்ற அலட்டலற்ற நடிப்பு வெளிப்பட்டிருக்கிறது.
சிறைக்குள்ளிருக்கும் கொடூர கொலைகாரனை, சிறைக்கு வெளியிலிருந்து பேட்டி காண்கிற எழுத்தாளராக வினோத் சாகர். எதிர்பாராத தருணத்தில் கொலைகாரனின் பிடியில் சிக்கிவிட பயத்தில் மிரளும்போது மட்டும் கவனம் ஈர்க்கிறார்.
புத்தகத்தைப் படித்து ஜெகதீஷாக மாறி கொலைகள் செய்கிறவர்களாக ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா இருவரும் சில விநாடிகள் மிரட்டலான பங்களிப்பை வழங்க, குரு சோமசுந்தரத்தின் நடிப்பு சற்றே கூடுதலாய் கவர்கிறது.
ஜான் விஜய், விஸ்வாந்த், திவ்யா கணேஷ் என மற்றவர்களும் குறை வைக்கவில்லை.
கே தனது பின்னணி இசையில் அமைதிக்கு அதிக இடம் கொடுத்து அடக்கி வாசித்திருக்க, நந்தாவின் ஒளிப்பதிவில் ஓரளவு திருப்தி கிடைக்கிறது.
கமர்ஷியல் மசாலா கலக்காத, கன்னாபின்னாவென குழப்புகிற, படு வித்தியாசமான படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால், இந்த ‘பயமறியா பிரம்மை‘யின் உருவாக்கமும் உங்களை பிரமிக்க வைக்கலாம்.