சரித்திரம், ஃபேண்டஸி என வித்தியாசமான படங்களை இயக்கி வெற்றி பெற்ற சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள பான் இந்தியா படம் ‘போட்.’
யோகிபாபு, கௌரி கிஷன் நடிக்கும் இந்த படத்தின் கதை 1940-ம் ஆண்டின் பின்னணியில் நடைபெறுகிறது.
சென்னை மீது ஜப்பான் குண்டு வீசியபோது உயிருக்கு பயந்து 10 பேர் ஒரு சின்ன படகில் கடலுக்குள் தப்பிக்கிறார்கள். எதிர்பாராத விதமாக நடுக்கடலில் அந்த படகு நகர முடியாமல் நின்று விடுகிறது.
அந்த பரபரப்பான சமயத்தில் படகு ஓட்டையாகி கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க, ஒரு பெரிய சுறாவும் படகை சுற்றிவர, படகில் உள்ளவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே கதை.
முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரில்லர், ஆக்ஷன், பொலிட்டிக்கல் காமெடியாக இருக்கும்.
வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் சிம்புதேவன். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நாயகனாக நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, விஜய், ஶ்ரீ தேவி, சுதீப் நடித்த ‘புலி’, பிரகாஷ் ராஜ், சந்தானம், கஞ்சா கருப்பு முதன்மை வேடங்களில் நடித்த ‘அறை எண் 305-ல் கடவுள்’, ராகவா லாரன்ஸை மற்றொரு பரிமாணத்தில் வெளிப்படுத்திய ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ ஆகிய படங்களை இயக்கியவர். சென்ற வருடம் இயக்கிய ‘கசடதபற’ சிறந்த திரைக்கதைக்கான பல விருதுகளைப் பெற்றது.
மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ்’ பிரபா பிரேம்குமாரின் பிரமாண்ட தயாரிப்பில் இந்த படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகிறது.
படக்குழு:
இசை: ஜிப்ரான்
ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம் படத்தொகுப்பு: தினேஷ்
தயாரிப்பு வடிவமைப்பு: டி.சந்தானம்