அந்த கணவன் மனைவி இரவு நேரத்தில் காரில் பயணிக்கிறார்கள். வழியில் கார் நின்று போகிறது. மனைவி காருக்குள் இருக்க கணவனை காரில் மேல்பகுதியில் வைத்து மர்மமான உருவம் கொலை செய்து காரை ரத்தத்தில் குளிப்பாட்டுகிறது. அந்த மனைவி அதிர்ச்சியில் மயக்கமாகி சிகிச்சைக்கு சேர்க்கப்படுகிறாள்.
அவளது சகோதரனாக கதாநாயகன், நடந்த கொலைக்கு யார் காரணம் என கண்டறியும் முயற்சியில் இறங்குகிறான். ஒரு கட்டத்தில் அவனை ஒரு உருவம் பின் தொடர்கிறது. இன்னொரு பக்கம் கணவனை பறிகொடுத்த அந்த பெண் கடத்தப்பட கதை வேகமெடுக்கிறது. ஒரு பக்கம் காவல்துறை விசாரணையும் தீவிரமடைகிறது. கொலை செய்தது அமானுஷ்ய சக்தி என சிலர் பேசிக் கொள்கிறார்கள்…
இப்படி திகிலும் திரில்லுமாக கடந்தோடும் கதையில் கொலையை செய்தது யார்? அதற்கான காரணம் என்ன? கடத்தப்பட்ட பெண் என்னவானாள்? கதாநாயகனை பின் தொடர்ந்தது யார்? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிகிறது அவள் பெயர் ரஜ்னி.
கொலையாளியைத் தேடுவதில் பரபரப்பு, கண்டறிந்தபின் ஆவேச ஆக்ரோஷம் காட்டுவதில் விறுவிறுப்பு என ஏற்றிருக்கும் பாத்திரத்துக்கேற்ற நடிப்பை தந்திருக்கிறார் காளிதாஸ் ஜெயராம்.
கதையின் பிரதான ‘ரஜ்னி’ பாத்திரத்தை தூக்கிச் சுமந்திருக்கிற பிரியங்கா ராய் தோற்றத்தில் வேறுபாடும் அதற்கேற்ற உடல்மொழியோடும் சீறிப் பாய்ந்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகராக அவரது பாத்திரத்தை சித்தரித்திருப்பதில் பெரிதாய் சுவாரஸ்யமில்லை.
காவல்துறை உயரதிகாரியாக அஸ்வின் கே குமார், ரஜ்னியின் முன்கதையை சொல்கிற பூ ராமு, நமீதா பிரமோத், சைஜூ குரூப், ரமேஷ் கண்ணா, செளன் ரோமி என மற்ற பாத்திரங்களில் வருபவர்களின் நடிப்பு நேர்த்தி.
நாயகனுக்கு ஜோடியென்றாலும் ரெபோ மோனிகாவுக்கு ஒருசில காட்சிகளில் வந்துபோகிற வேலை மட்டுமே!
‘4மியூஸிக்’ குழுவின் பின்னணி இசை நேர்த்தி.
ஒளிப்பதிவு, எடிட்டிங் என மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு படத்துக்கு பலம் கூட்டியிருக்கிறது.
ஹாரர் படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிற விதத்தில் கிரைம் திரில்லர் அனுபவம் தர முயற்சித்த இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ், திரைக்கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.