பருவம் கடந்தும் வயதுக்கு வராமல் மன உளைச்சலில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் அந்த பெண், தன் கனவில் வருகிற இளைஞனைக் காதலிக்கிறாள்.
கனவில் வந்தவன் ஒருநாள் நேரில் வருகிறான். அந்த ஊர் திருவிழாவில் நடக்கும் நாடகத்தில் கதாநாயகனாக மேடையேறி மக்களைக் கவர்கிறான்.
கனவில் வந்தவனை நேரில் பார்க்கும் அவள் உற்சாகமாகி அவனை நேசத்தோடு பார்க்க, அதில் மயங்கிய அவன் அவள் மீது காதல் கொள்ள…
இப்படி நகரும் கதையில், தான் பூப்பெய்தாததை நினைத்து அவள் அவனது காதலை ஏற்காமல் விலகுகிறாள். அதன்பின் இருவரும் அதிர்ச்சியான சில சம்பவங்களைச் சந்திக்கிறார்கள். அதையெல்லாம் கடந்து அவர்கள் மணவாழ்வில் இணைந்தார்களா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இணை இயக்கம் ஆர் எஸ் விஜயபாலா
கதைநாயகியை மையப்படுத்திய கதை என்பதை புரிந்து அதற்கேற்ற உணர்வுகளை உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார் மனிஷா ஜித். தன் குறைகளை இஷ்ட தெய்வத்திடம் சொல்லி ஆறுதலடைவது, தெய்வம் நல்லதாக எதையுமே செய்யாத நிலையில் அந்த தெய்வத்தை அடித்து ஆத்திரத்தை தணித்துக் கொள்வது என நீளும் காட்சிகள் இளகிய மனம் கொண்டோரை கலங்கடிக்கும்.
நாயகன் ஆர் எஸ் கார்த்திக் கூத்துக் கலைஞனாக காத்தவராயன் வேடமிட்டு மேடையில் நடிக்கும்போது பொருத்தமான பங்களிப்பை தந்திருக்கிறார். நாயகி மீது காதல் வயப்படும்போது அதற்கேற்ப நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
கூத்து நாடக ‘ஜமா’வின் தலைவராக டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், நாயகியின் தாய்மாமனாக மாரிமுத்து என மற்றவர்களின் கச்சிதமான நடிப்பு, இதமான பாடல்கள், கதையோட்டத்தின் தேவையை நிறைவு செய்திருக்கிற பின்னணி இசை, எளிமையான ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் பின்னிப் பிணைந்து வளமாகியிருக்கிறது கதைக்களம்.
வயதுக்கு வராத பெண்ணுக்கு காதல் வருவது என்ற கதை ஒரு விதத்தில் புதியதுதான் என்றாலும், திரைக்கதை தாறுமாறாக பயணித்திருப்பதால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறது.
Rating 2.5 / 5