கதையம்சமுள்ள படம் பார்த்த நிறைவு, வரலாற்றுப் படம் பார்த்த திருப்தி, சாகசப் படம் பார்த்த சிலிர்ப்பு, திகில் திரில்லர் படம் பார்த்த உற்சாகம் என எல்லாவற்றையும் இணைத்து வழங்கும் விதத்தில் உருவாகியிருக்கும் மலையாளப் படைப்பு. தேர்ந்த நடிகர் டொவினோ தாமஸ் நடித்திருக்கும் 50-வது படம்.
இளைஞன் அஜயனின் தாத்தா மணியன், மன்னர்கள் அரசாண்ட காலத்தில் ஊரே வணங்கும் விளக்கு ஒன்றை திருடி, அதற்குத் தண்டனையாக உயிரிழக்கிறார். தாத்தா திருடன் என்பதால் அவரது பேரனையும் ஊர் உலகம் திருடனாகவே கருதுகிறது. அதனால் போலீஸ் விசாரணை உட்பட அவனுக்கு பல விதங்களில் சிக்கல் உருவாகிறது. அந்த சிக்கல்களிலிருந்து மீள வேண்டுமென்றால் தாத்தா காலத்தில் காணாமல் போன விளக்கை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
அதற்கான முயற்சியில் இறங்கும் அஜயன் சந்திக்கும் சவால்களும் கஷ்ட நஷ்டங்களும் மிச்சசொச்ச கதையாக கடந்தோட சிலை கிடைத்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்.
வானிலிருந்து பூமிக்கு வந்துசேரும் கல், சிலை உருவான விதம், அதன் மகத்துவம், சிலை புதைந்துள்ள இடத்தை தேடிப்போவதில் சுவாரஸ்யம் என திரைக்கதையில் விறுவிறுப்பு எக்கச்சக்கம். இயக்கம் ஜிதின் லால்.
மணியனாக வரும் டொவினோ தாமஸ் புத்திசாலித்தனமாக திருடுவது, மடக்கிப் பிடிக்கும் போலீஸின் பிடியிலிருந்து அசுரத்தனமாக சண்டையிட்டுத் தப்பிப்பது என நடிப்பில் மிரட்டியிருக்கிறார். அடர்ந்த தலைமுடியோடு புதர்போல் வளர்ந்திருக்கும் தாடி மீசையுமாய் தோற்றத்திலும் அந்த மிரட்டல் தெரிகிறது.
அதே டொவினோ அஜயனாக வரும்போது நன்கு படித்த இளைஞனாக, நல்லவனாக வேறொரு தோற்றத்துக்கு தாவியிருக்கிறார். செய்யாத திருட்டுக்கு பழி சுமக்கும் சூழ்நிலையில் கலங்கி நிற்பது, சிலையை மீட்டெடுக்க திகிலும் திரில்லுமான பயணம் மேற்கொள்வது என காட்சிக்கு காட்சி தேர்ந்த நடிப்பால் கவர்கிறார். ஆக்ரோஷ்மான சண்டைக் காட்சிகளிலும் அசத்துகிறார்.
எளிய குடும்பத்து அஜயனை காதலிக்கிற ஊரின் பெரிய குடும்பத்துப் பெண்ணாக கிர்த்தி ஷெட்டி. நடிப்பில் பெரிதாய் எதையும் செய்யாவிட்டாலும் அவரது இளமையும் அழகும் வசீகரச் சிரிப்பும் மனதை ஈர்க்கிறது.
மணியனின் மனைவியாக வருகிற சுரபி லெஷ்மி, சிலையை கடத்திப்போக திட்டமிடும் வில்லனாக ஹரிஷ் உத்தமன் என மற்றவர்களின் நடிப்பு கச்சிதம். கவிதைத்தனமாக காதல் காட்சியில் தலை காட்டிப்போகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
திபு நினன் தாமஸின் ஆர்ப்பட்டமான, அதிரடியான பின்னணி இசை காட்சிகளுக்கு வேகமூட்டியிருக்கிறது.
ஒளிப்பதிவு தரம்.
1900 காலகட்டத்தில் நடக்கும் காட்சிகளில், சிலை புதைந்துள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் கலை இயக்குநரின் பங்களிப்பு தனித்து தெரிகிறது.
1900 காலகட்டம், 1990 காலகட்டம் என முன்பின்னாக போய்வரும் கதையின் போக்கை நேர்த்தியாக கத்தரித்து இணைத்திருக்கிறார் எடிட்டர் சமீர் முகமது.
கதை சுமாராக இருந்தாலும், திரைக்கதையில் ஆங்காங்கே இருக்கும் பரபரப்பு படத்துக்கு பலமாகியிருக்கிறது.
ஒருசில காட்சிகளில் இருக்கும் தொய்வை பொறுத்துக் கொண்டால், அஜயன்டே இரண்டாம் மோஷனம் (ஏ ஆர் எம்) ஆக்சன் அட்வென்சர் பட விரும்பிகளுக்கு அசத்தல் அனுபவம் தருவது உறுதி!