சமூக அக்கறைக் கருத்துக்களை தூக்கிச் சுமந்திருக்கிற படம்.
அம்மாவை இழந்து அப்பாவுடன் வாழ்ந்து வருகிற சிறுவன் அப்பு, ஆறாம் வகுப்பு படிக்கும்போது அப்பாவையும் வசிப்பிடத்தையும் இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறான். ஆதார் கார்டு, அதுவரை படித்ததற்கான சான்று என அனைத்தும் பறிபோன நிலையில் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கிறான்.
பல பேரை கொன்றதோடு, என் கவுண்டருக்காக சுற்றி வளைத்த ஐந்தாறு போலீஸ்காரர்களையும் கொன்றுவிட்டு தலைமறைவாக இருக்கிற தர்மா, சிறுவன் அப்புவால் தான் கொல்லப்படுவோம் என்ற பயத்தில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான்.
இன்னொரு பக்கம் நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல சம்பளம் என வாழ்வில் முன்னேறிய சபாரத்தினம், உயர்சாதிப் பெண்ணைக் காதலித்து கல்யாணம் செய்துகொண்டதால் மனைவியை இழந்து, என்கவுண்டரில் போட்டுத்தள்ள போலீஸ் பட்டியலிட்டுள்ள குற்றவாளிகளின் வரிசையில் சேர்கிறான்.
இந்த மூன்று தரப்புக்கும் ஒரு கட்டத்தில் தொடர்பு உருவாகிறது. அது எப்படி உருவாகிறது என்பதும் அந்த தொடர்பால் என்னென்ன நல்லது கெட்டது நடக்கிறது என்பதுமே திரைக்கதை…
ஒரு பெரிய கொலைக் குற்றவாளி, சாதாரண ஆதரவற்ற சிறுவன் தன்னைக் கொன்றுவிடுவான் என நினைத்து பயப்படுவதும், அதற்கான காரணமும் கதையில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.
அப்புவாக வருகிற சிறுவன் ஜீவன் பிரபாகரின் தோற்றம் படம் முழுக்க துரோகத்தைச் சந்தித்து பரிதாப சூழ்நிலையிலிருந்து மீளமுடியாத கனமான பாத்திரத்தை சுமப்பதற்கு கச்சிதமாக பொருந்திப் போகிறது.
அப்பாவை இழந்த சோகம், சொந்த வீட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட வலி, சைக்கிள் வாங்குவதற்காக பாட்டில் பொறுக்கி சம்பாதித்த காசை ஒருவன் அயோக்கியன் அபகரிக்கும்போது மனம் நொறுங்குவது, யாராவது தன்னை ஸ்கூலில் சேர்த்து விட மாட்டார்களா என ஏங்குவது, எக்காரணம் கொண்டும் திருட்டு அதுஇதுவென தவறான பாதையில் போய்விடக் கூடாதென்ற உறுதியோடு இருப்பது என காட்சிகளின் போக்கிற்கேற்ப நடித்திருப்பதும் பொருத்தமாக இருக்கிறது.
கல்லூரி வினோத்துக்கு கதாநாயகனாக முதல் படம். சந்தர்ப்பங்கள் செய்யும் சதிகளால் ஊரையே மிரள வைக்கும் தாதா ரேஞ்சுக்கு வளர்ந்து, போலீஸின் பிடியில் சிக்கி ‘உன்னால முடிஞ்சத பாத்துக்கோ’ என்றெல்லாம் சவால் விடுகிற டெரராக கதாபாத்திரம். அதற்கேற்ப தோற்றத்திலும் நடிப்பிலும் முரட்டுத்தனத்தை தன் கொண்டு வந்திருப்பவர் காதல், கல்யாணம் என கடந்துபோகும் காட்சிகளில் ஆளே மாறி அமைதியாக வலம் வருகிறார்.
இளமையாக அழகாக சற்றே சினேகா சாயலில் இருக்கும் பிரியதர்ஷினி காதல் கணவனுடன் கொஞ்சல் மிஞ்சல், கட்டியணைப்பு, முத்தப் பரிமாற்றம் என உற்சாகத்தில் மிதக்கும் முதலிரவுக் காட்சியில் வெளிப்படுத்தியிருக்கும் மிதமான கவர்ச்சி இளைஞர்களைக் கிறங்கடிக்கும்.
அரசியல்வாதி, போலீஸ் உயரதிகாரி இருவருக்காகவும் கணக்கு வழக்கில்லாமல் கொலைகள் செய்து, அதே போலீஸால் என்கவுன்டர் களத்தில் நிறுத்தப்பட்டு, ஆத்திரம் அத்துமீறி போலீஸாரை வதம் செய்கிறபோது கவனிக்க வைக்கிறது தர்மாவாக வருகிறவரின் நடிப்புப் பங்களிப்பு.
காவல்துறை உயரதிகாரியாக பி எல் தேனப்பன், சாதி வெறியராக விஜய் சத்யா, ஏலச்சீட்டு மோசடிப் பேர்வழியாக பிரியங்கா ரோபோ சங்கர், ஆசிரியராக வேலு பிரபாகரன் என மற்றவர்கள் நேர்த்தியாக நடித்திருக்க, ஆலன் விஜயின் பின்னணி இசை காட்சிகளை பலப்படுத்த உதவியிருக்கிறது. பாடல்கள் பரவாயில்லை ரகம்.
கதைக்கேற்ற நடிகர் நடிகைகள், அதற்கேற்ற லொகேஷன்கள் என பலவற்றை பட்ஜெட் அனுமதித்த தரத்தில் தந்திருக்கும் இயக்குநர் வசீகரன் பாலாஜி, தனது எளிமையான இந்த படைப்பின் மூலம் படிப்பின் அவசியத்தை வலியுறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது!