அதிர வைக்கும் ஆரம்பக் காட்சி, நடுங்க வைக்கும் நிறைவுக் காட்சி, படம் முழுக்க பரபரப்பு என ‘அந்த நாள்’ தருகிற திகிலூட்டும் அனுபவம் அட்டகாசம்.
திரைப்பட இயக்குநர் ஒருவர் தன் குழுவினருடன் கதை விவாதத்திற்காக ஒரு வீட்டுக்கு போகிறார். அவரையும் அவரது குழுவினரையும் அங்கிருக்கும் அமானுஷ்ய சக்தி கொன்றழிக்கத் துடிக்கிறது. மாஸ்க் அணிந்த ஒரு உருவம் அவர்களில் ஒருவரை கோடரியால் வெட்டி ரத்த வெள்ளத்தில் துடிக்க விடுகிறது. மற்றவர்களையும் அந்த உருவம் தீர்த்துக் கட்டாமல் விடாது என்ற நிலைமை உருவாகிறது.
அந்த வீட்டில் அமானுஷ்ய சக்திக்கு என்ன வேலை? மாஸ்க் அணிந்த நபர் பேயா, பிசாசா அல்லது நம்மைப் போன்ற மனிதனா? கதை விவாதத்திற்காக போனவர்களின் கதி என்ன? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்லி நகர்கிறது இயக்குநர் வீவி கதிரேசன் அமைத்திருக்கும் திரைக்கதை…
கதையின் நாயகன் ஆர்யன் ஷாம் ஏவி எம் குடும்பத்தின் ரத்த சம்பந்த உறவுக்காரர். ஆனால், அதையெல்லாம் பெரிதாய் வெளியில் சொல்லிக்கொள்ளாமல் கலைத்துறையில் கால் பதித்திருக்கும் அவர், ‘அழுத்தமான கதைகளில் என்னால் நடிக்க முடியும்’ என சொல்லும் விதமாக மிரள்வது மிரட்டுவது என காட்சிகளுக்குத் தேவையான மாறுபட்ட உணர்வுகளை கச்சிதமாய் வெளிப்படுத்தியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்க்கும்.
கதாநாயகி என்றாலும் ஹீரோவை காதலிக்கிற, அவருடன் ஆடிப்பாடுகிற வேலையெல்லாம் கிடையாது. அமானுஷ்ய சக்தியின் பிடியில் சிக்கி உயிரைக் காப்பாறிக் கொள்ள போராடுகிற வேலை. அதை பயத்துடனும் பதற்றத்துடனும் பொருத்தமாக செய்திருக்கிறார். கிட்டத்தட்ட ஹீரோவுடன் கதை விவாதத்தில் இணைந்த லீமா, கிஷோர், ராஜ்குமார் என மற்றவர்களுக்கும் அதே வேலைதான். அதை சரியாகச் செய்திருக்கிறார்கள்.
ஹீரோவின் குழுவிற்கு சமைத்துப் போடும் பணியாளராக ஒட்டிக் கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சி எந்த நேரமும் போதையில் மிதப்பதால், தன்னைச் சுற்றி நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களை உணராமல் கோமாளித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பது கலகலப்பூட்டுகிறது.
சதீஷ் கதிர்வேலின் ஒளிப்பதிவு, ராபர்ட் சற்குணத்தின் பின்னணி இசை, கலை இயக்குநரின் திகில் உணர்வைக் கூட்டும் நரபலி கள உருவாக்கம் என பல அம்சங்கள் படத்திற்கு பலம்.
நரபலி என்ற பெயரில் நடக்கும் கொடூரங்களை, பயத்தின் உச்சத்துக்கு போய் திரும்புகிற விதத்தில் தன்னால் முடிந்தவரை தரமாக படமாக்கியிருக்கும் இயக்குநர் அடுத்தடுத்து வெவ்வேறு ஜானர்களில் படங்களை இயக்கி மக்களைக் கவர்வார் என உறுதியாக நம்பலாம்.