‘அதிகாரத்தின் கரங்கள் கொடூரமானவை; ஆட்சியாளர்களின் மனங்கள் இரக்கமற்றவை’ என்பதை அஞ்சாமல் எடுத்துக் காட்டியிருக்கும் ‘அஞ்சாமை.’
கூத்துக் கலைஞரான சர்க்கார், தன் மனைவியின் விருப்பப்படி மகனை டாக்டராக்கி பார்க்க ஆசைப்படுகிறார். அவனை படிக்க வைக்க பல விதங்களிலும் கஷ்டப்படுகிறார். மகனும் நன்றாக படித்து ‘நீட்’ எனப்படுகிற மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகிறான். தமிழ்நாட்டிலிருந்து ஜெய்ப்பூர் சென்று தேர்வு எழுதுகிற கட்டாயம் உருவாகிறது.
போதிய பண வசதியில்லாத சூழலில், மகனை அழைத்துக் கொண்டு ரயிலில் பயணித்து ஜெய்ப்பூர் போய் சேர்வதற்குள் சர்க்காருக்கு பாதி உயிர் போய்விடுகிறது. தேர்வு மையத்தில் மாணவ, மாணவிகள் மீது நடக்கும் அத்துமீறல் அராஜகங்களைக் கண்டு மீதமிருக்கும் உயிரும் போய்விடுகிறது.
மனம் நொறுங்கிப்போன மகனுக்கு காவல்துறை அதிகாரியொருவர் ஆதரவு தர, அவனது தந்தையின் இழப்புக்கு அரசாங்கமே காரணம் என்று சொல்லி, அதற்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட, வழக்கு விசாரணையில் யாரெல்லாம் சிக்கினார்கள்? சிக்கியவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைத்ததா? சர்க்கார் வழக்கில் சர்க்கார் என்ன முடிவுக்கு வந்தது? அரசின் அராஜகங்களுக்கு நிஜத்தில் முற்றுப்புள்ளி வைக்க முடிகிறதோ இல்லையோ, படத்திலாவது அது சாத்தியமானதா? இல்லையா?
எதெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் திரைக்கதையில் துணிச்சலாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன்.
கூத்துக் கலைஞனாக வரும்போது பளீர் முகம் காட்டுகிற விதார்த், மகனைப் படிக்க வைக்க கடன் வாங்கும்போது கனவுகளைச் சுமந்தலையும் தந்தையின் உணர்வை கச்சிதமாக கடத்தியிருக்கிறார். முன்பதிவு செய்யாத ரயில் பயணத்தில் அவர் படுகிற அவஸ்தைகள் பெரிய அதிர்வுகள் தராமல் கடந்துபோக, தேர்வு மையத்திற்கு சென்று சேர்வதில் தாமதமாகும்போது பதற்றமடைவது, தேர்வு மையத்தின் நேர அவகாசம் முடிந்தநிலையில் மகனை அனுமதிக்கக் கேட்டு அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சுவது, தேர்வு மையத்தில் நடக்கும் காட்டுமிராண்டித் தனமான சோதனைகளைக் கண்டு வேதனைக்கு ஆளாவது, குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சாலையில் மயங்கிச் சரிவது என நீளும் காட்சிகளில் விதார்த் தந்திருக்கும் நடிப்பு தேர்ந்த நடிப்புக்கு சான்று; படத்துக்கு பலம்!
விதார்த்தின் மனைவியாக வருகிற வாணி போஜன், விதார்த் படும் கஷ்டங்களில் சரிவிகித பங்கெடுத்துக் கொண்டு அதற்கேற்ற தரமான நடிப்பை தர, விதார்த்தின் மகனாக கதையின் நாயகனாக வருகிற கிரித்திக் மாணவப் பருவத்துக்கு வயதளவில் கச்சிதமாக பொருந்திப் போவதோடு, தனக்காக அப்பா படும் கஷ்ட, நஷ்டங்களைக் கண்டு வருந்துவதில், கோர்ட்டில் அமைச்சரிடம் காரசாரமான நியாயமான கேள்விகளை எழுப்புவதில் நிமிர்ந்து பார்க்க வைக்கிறார்.
நேர்மையான காவல்துறை அதிகாரியாக ஆரம்பக் காட்சியில் கெத்தாக வெளிப்பட்டு, பின்னர் வழக்கறிஞராக மாறி அரசுத் தரப்பின் தவறுகளை நீதிமன்றத்தில் எடுத்துவைக்கும்போது அந்த கனமான காட்சிகளை ரகுமானின் பங்களிப்பு தூக்கிப் பிடித்திருக்கிறது.
யாருக்கும் பயப்படாத, எதற்கும் விலைபோகாத நீதிபதியாக பாலச்சந்திரன் ஐ.எ.எஸ். கிட்டத்தட்ட படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆளுமையாக நிரப்பியிருக்கிறார். எல்லா நீதிபதியும் இவரைப் போல இருந்துவிட்டால் நாடு எத்தனை சிறப்பாய் இருக்கும் என்ற எண்ணத்தையும் தருகிறார்.
ரேகா நாயருக்கு சிறிய வேடமென்றாலும் கதையோடு பின்னிப்பிணைகிற வலுவான பாத்திரம். அதன் தன்மையுணர்ந்திருப்பது அவரது நடிப்பில் தெரிகிறது.
அரசியல்வாதியாக வருகிற மாரிமுத்து, அமைச்சராக வருகிறவர், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் பங்களிப்பை நேர்த்தியாக தந்திருக்க, பாடலொன்று மிகச்சரியான தருணத்தில் வந்துபோகிறது; கதையோட்டத்தை வலுப்படுத்தியிருக்கிறது பின்னணி இசை.
நீட் தேர்வு நெருக்கடியால் மருத்துவப் படிப்பை கனவான கொண்ட மாணவ, மானவிகள் சந்தித்த, சந்திக்கிற பிரச்சனைகளை எடுத்துக் காட்டியதோடு நின்றுவிடாமல், பெற்றோர்களின் வலியையும் பதிவு செய்திருப்பதற்காக அஞ்சாமை படக்குழுவை பாராட்டலாம்.
மாணவச் சமுதாயமும் பெற்றோர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இந்த படம், நீட் தேர்வு மரணங்கள் தமிழகத்தை உலுக்கிய காலத்தில் வெளிவந்திருந்தால் வேறு விதமான அதிர்வுகளை உருவாக்கியிருக்கும்; பெரியளவில் வரவேற்பை பெற்றிருக்கும்.