‘ரவுடியிஸம் ஒரு வழிப்பாதை; அதில் நுழைந்தால் திரும்பி வர முடியாது’ என்பதை எடுத்துச் சொல்ல ஏகப்பட்ட திரைப்படங்கள் வந்தாயிற்று. இதோ மற்றுமொன்று…
மாஸ்டர் மகேந்திரனுக்கு பள்ளிப் படிப்பின்போதே குடிப்பழக்கம் தொற்றிக் கொள்கிறது. கேரேஜ் நடத்துவதோடு போதைப் பொருளும் விற்கிற கெத்தான ஒருவரோடு நட்பும் ஏற்படுகிறது. அந்த நட்பால் அடிதடி ஆசாமியாக, கொலைகாரனாக, லோக்கல் தாதாவாக மாறிவிடுகிறார். தன் உயிருக்கு குறிவைக்குமளவுக்கு எதிரிகளையும் சம்பாதித்து விடுகிறார்.
அப்படியான நெருக்கடிக்குள் சிக்கியபின், ‘என்னை காப்பாற்றிக்கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வேன்’ என்று சொன்னபடி முறுக்கேறி திரிகிறார். தன்னைக் கொல்லத் துடிப்பவர்களிடமிருந்து அவரால் அவரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா இல்லையா என்பதே மிச்சமீதி கதை.
மாஸ்டர் மகேந்திரனின் பரபரக்கும் விழிகள் கொலைவெறியைக் காட்டிவிட, அந்த முறுக்கேறிய உடற்கட்டு ஆக்சன் காட்சிகளின் ஆவேசப் பாய்ச்சலுக்கு உதவியிருக்கிறது. போகிற போக்கில் கொஞ்சமே கொஞ்சம் காதல் உணர்வுகளையும் கடத்துகிறார்.
கதாநாயகி என்ற பெயரில் சில காட்சிகளில் வந்துபோகிறார் ஆதிரா. நடிப்பில் சொல்லும்படி ஏதுமில்லை.
கேரேஜ் உரிமையாளராக வருகிற ஜி எம் சுந்தருக்கு மிகப்பெரிய தாதா மாதிரியான கதாபாத்திரம். அதை மிதமான சீற்றங்களால் சிம்பிளாக செய்திருக்கிறார்.
எளிமையான கதைக்களத்துக்கு பொருத்தமான வில்லத்தனத்தில் கவனிக்க வைக்கிறார் தாசரதி.
தீபா பாலு, முரளிதரன் சந்திரன், சிரிகோ உதயா, மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் என மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்கள் அளவாய் நடித்திருக்க, ஒளிப்பதிவில் நேர்த்தியான உழைப்பைத் தந்திருக்கிறார் விஜயகுமார் சோலைமுத்து.
பின்னணி இசையால் காட்சிளுக்கு வீரியமேற்றியிருக்கும் பாலமுரளி பாலு, பாடல்களில் இனிமை கூட்டியிருக்கிறார்.
வழக்கமான கதையை எடுத்துக் கொண்டு, திரைக்கதையையும் வழக்கம்போலவே யோசித்திருக்கிற இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், அடுத்தடுத்த படங்களில் தேர்ச்சிபெற வாழ்த்துகள்!