தன் காதலியை கொலை செய்த நபரை பழிவாங்கத் துடிக்கும் இளைஞன். படத்தின் தலைப்பைப் போலவே கதையும் வெரிவெரி சிம்பிள்!
சினிமாவில் நடிப்பதற்கு ஆசைப்படுகிற காயத்ரி, தன் காதலன் பிரஜனின் வழிகாட்டலோடு அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். ஒருநாள் அவர் ரத்தக் காயங்களுடன் இறந்துகிடக்கிறார். மனதாலும் உடலாலும் நொறுங்கிப் போகிற பிரஜன் தன் காதலியை கொலை செய்தது யார் என கண்டுபிடிக்க களமிறங்குகிறார்.
அந்த நேரமாகப் பார்த்து, பிரபல திரைப்பட இயக்குநரின் உதவியாளர்களான பிரஜனின் நண்பர்கள் ஒரே விதமாக அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். காவல்துறையின் சந்தேகம் பிரஜன் மீது திரும்புகிறது. அவரை சுற்றி வளைக்க தீவிரமாக திட்டமிடுகிறது.
பிரஜன் அந்த திட்டத்தை எப்படி சமாளிக்கிறார் என்பதும், உண்மையிலேயே கொலைகளைச் செய்வது யார் என்பதும், பிரஜனின் காதலி யாரால் கொல்லப்பட்டார் என்பதும் படத்தின் கதை. இயக்கம் வெ ஸ்டாலின்
ஒரேயொரு ‘டூயட்’டில் காதலியுடன் உற்சாகமாக வலம் வருவதை தவிர்த்து படம் முழுக்க சோகத்துடனும் பதற்றத்துடனும் அலைந்து திரிகிற பிரஜனை பார்க்கப் பாவமாக இருக்கிறது. அதையும் தாண்டி காதலியை பிரிந்த துக்கத்தோடு நண்பர்கள் கொலையாவதைக் கண்டு கண்ணீர் சிந்துவதும், தன்னை நம்பாத காவல்துறையிடமிருந்து தப்பிக்கப் போராடுவதுமாய் கவனம் ஈர்க்கிறார்.
ஆடிசனுக்காக போன இடத்தில் அடிபட்டுச் சாகிறபோது பரிதாபத்தைச் சம்பாதிக்கிற நாயகி காயத்ரி ரெமா, பாடல் காட்சியில் பளீர் சிரிப்பால் வசிகரீக்கிறார்.
ஏழெட்டு உதவியாளர்களை வைத்துக் கொண்டு பந்தா காட்டுவதும், நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணிடம் அத்துமீறுவதுமாய் வில்லத்தனத்தில் பார்டரில் பாஸாகிறார் இயக்குநர் வெ ஸ்டாலின்.
படத்தில் வரும் இயக்குநரின் உதவியாளர்களில் ஒருவர் எந்நேரமும் தன்னுடன் பணிபுரிகிறவருடன் படுக்கையில் சந்தோஷமாக இருக்கிறார். இன்னொரு உதவியாளரான ‘கே பி ஒய்’ சரத், அவர்கள் சம்பவத்தில் ஈடுபடும்போது கதவைத் திறந்து கடுப்பாகிறார். அந்த காட்சிகள் கிளுகிளுப்பு விரும்பிகளுக்கு மினி டிபன் சாப்பிட்ட திருப்தி தரலாம்.
மனநல நிபுணராக வருகிற ‘வாய்ஸ் ஓவர்’ ராமநாதன், மனநலம் பாதிக்கப்பட்ட ஓவியராக வருகிற ‘வடக்குவாசல்’ ரமேஷ், காவல்துறை உயரதிகாரிகளாக வருபவர்கள் அவரவர்க்கு கொடுத்த கதாபாத்திரத்தை பலப்படுத்த தேவையான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
சாதாரணமாக நகரும் காட்சிகளுக்குகூட பின்னணி இசையால் சுறுசுறுப்பு கூட்டியிருக்கிறார் சதீஷ் செல்வம்.
தேவசூர்யாவின் ஒளிப்பதிவு, அரவிந்தன் ஆறுமுகத்தின் படத்தொகுப்பு கச்சிதம்.
கொலை, கொலையாளியைத் தேடுதல், அதில் சந்திக்கும் சவால்கள் என பயணிக்கும் கதை, நிறைவடையும் தருணத்தில் ஹாரர் கதைக்களத்தில் நுழைவது எதிர்பார்க்காத டிவிஸ்ட்.
உருவாக்கத்தில் சில குறைகள் இருந்தாலும், போகிறபோக்கில் திரைத்துறையில் வாய்ப்பு தேடும் பெண்கள் சந்திக்கும் ஆபத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியிருப்பதற்காக இயக்குநரை பாராட்டலாம்.