குணச்சித்திர வேடமேற்று தனித்துவமான நடிப்பால் கவர்கிற எம்.எஸ்.பாஸ்கர், கதையின் முதன்மைப் பாத்திரத்தில் முத்திரை பதிக்க முயற்சித்திருக்கிற படம்.
இரண்டு வாட்டசாட்டமான இளைஞர்களை சாமர்த்தியமாக மடக்கிப் பிடிக்கிற வய்து முதிர்ந்த எம்.எஸ்.பாஸ்கர், அவர்களை ஆள் நடமாட்டமில்லாத இடத்துக்கு கொண்டுபோய், தப்பிக்க நினைத்தால் தோல் உரிந்து விடுகிற மாதிரி வினோதமான முறையில் சிக்கவைத்து குரூரமாகத் தாக்குகிறார். அப்படியெனில் அவர்கள் ஏதோவொரு பயங்கர சம்பவத்தை செய்திருப்பார்கள்தானே? அந்த சம்பவம் என்ன என்பது அதிர்ச்சி தருகிற பிளாஷ்பேக்… இயக்கம் அருண் கே பிரசாத்
இரண்டு பெண்களுக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர். தன் பெண் தன் கண் முன்பே கொடியவர்களால் தாக்கப்படுவதை கண்டு துடிக்கும்போது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்துபவர், குற்றவாளிகளைத் தாக்கி உண்மையை வரவைக்கும்போது மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு மாறுபட்ட அவதாரமெடுத்திருக்கிறார். வயதான ஒருவர் எப்படி ஆக்சனில் அதிரடி காட்ட முடியும் என்று நம் மனதில் தோன்றும் சந்தேகம் கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டில் தீர்கிறது.
எம்.எஸ்.பாஸ்கரின் மூத்த மகளாக வெண்பா, அவருக்கு ஜோடியாக விஷ்வந்த், இளைய மகளாக பிரியதர்ஷினி, வில்லன்களாக ஆகாஷ் பிரேம்குமார், கார்த்திக் சந்திரசேகர் என பிரதான பாத்திரங்களில் வருகிறவர்கள் கதைக்கேற்ற நடிப்பைத் தர, சிலபல படங்களில் பார்த்துப் பழகிய அரசியல்வாதி பாத்திரத்தில் வந்து போகிறார் நமோ நாராயணன்.
ஆக்சன் திரில்லரின் தேவையை சரிவர நிறைவு செய்திருக்கிறது எஸ்.ஆர்.ஹரியின் பின்னணி இசை. நேர்த்தியான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் எம்.ஏ.ஆனந்த்.
படத்தில் ரத்தம் பீறிடும் வன்முறைக் காட்சிகள் அதிகம். மென் மனதுக்காரர்கள் எட்டிப் பார்க்காமலிருப்பது நல்லது.
அரசியல் பதவிக்கு ஆசைப்படுகிறவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு உதாரணமாய் பல படங்களைப் பார்த்துவிட்ட நிலையில், எளிமையான நடிகர், நடிகைகளின் பங்களிப்பில் அப்படியொரு படத்தை பார்க்க நினைப்பவர்கள் அக்கரனுக்கு டிக்கெட் வாங்கலாம்.