மருத்துவத்துறை குற்றத்தை மையப்படுத்திய சர்வைவல் திரில்லராக ‘ஐமா.’
தற்கொலை செய்து உயிரைவிட நினைக்கும் நாயகனும், நாயகியும் கடத்தப்பட்டு மர்மம் சூழ்ந்த இடமொன்றில் அடைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறார்கள். ரொம்பவே சிம்பிளாக சொல்லிவிட முடிகிற கதை.
அவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏன் வந்தது? அவர்களை கடத்தியவர்கள் யார்? கடத்தலின் நோக்கம் என்ன? கடத்தப்பட்டவர்கள் என்னவாகிறார்கள்? இப்படியான கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை. இயக்கம் ராகுல் கிருஷ்ணா
கடத்திய தரப்பிலிருந்தே தப்பிக்கும் வழிமுறைகள் சொல்லிக் கொடுத்தபின்னும் சிறைபட்ட இடத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிப்பது, பரிதாபமும் விரக்தியும் சூழ்ந்த மனநிலைக்கு ஆறுதலாய் முத்தமிட்டுக் கொள்வது என படு இளமையான இருக்கிற நாயகன் யூனுஸும் நாயகி எல்வின் ஜூலியட்டும் கவனம் ஈர்க்கிறார்கள்.
மனிதர்கள் மீது வில்லங்கமான மருத்துவ ஆராய்ச்சி செய்பவராக வருகிற சண்முகம் ராமசாமி மிதமான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே.
அகில் பிரபாகரன், ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன் ஆகியோரின் நடிப்பு போதுமானதாக இருக்கிறது.
கே.ஆர்.ராகுலின் பின்னணி இசைக்கு பாஸ்மார்க் போடலாம். விஷ்ணு கண்ணனின் ஓளிப்பதிவு நேர்த்தி.
வித்தியாசமான ஒன்லைனை பிடித்த இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் ‘ஐமா’, ‘ஜோர்மா’ என சொல்ல வைத்திருக்கும்.