பேய்ப் படத்துக்கான வழக்கமான கதைக்களத்தில், சற்றே வித்தியாசமான திரைக்கதையில், எளிமையான பட்ஜெட்டில், எளிமையானவர்களின் நடிப்பில் ஒரு படம்.
காட்டுப் பகுதிக்குள் இருக்கும் பாழடைந்த அந்த பங்களாவுக்குள் திரைப்படத்துக்கான கதை எழுத, விவாதிக்க தன் துறை சார்ந்த நண்பர்களுடன் போய்ச் சேர்கிறார் நாயகன் சித்தார்த். அவர்கள் அந்த பங்களா வளாகத்துக்குள் கால் வைத்த நிமிடத்திலிருந்தே மன உளைச்சல் தருகிற அமானுஷ்ய சம்பவங்கள் ஆரம்பமாகின்றன. பேய் நடமாட்டமும் அதன் அச்சுறுத்தலும் தாக்குதலும் அதிகரிக்கிறது. இந்த நிலையில் சித்தார்த்தின் காதலி அந்த பங்களாவுக்கு வந்து சேர்கிறார்.
எல்லோருமாக அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். ஒருவரை கொலை செய்தால்தான் மற்றவர் தப்பிக்க முடியும் என்கிற அளவுக்கு நிலைமை விபரீதமாகிறது. கதை சூடுபிடிக்கிறது.
அந்த விபரீத சூழ்நிலையை அவர்களால் சமாளிக்க முடிந்ததா, இல்லையா என்பது விவிறுப்பாக நகரும் அடுத்தடுத்த காட்சிகள்.
50 வருடங்கள் முன் தனது படம் இயக்கும் ஆசைக்கு ஒரு அயோக்கின் ஆப்பு வைக்க, அந்த விரக்தியால் தற்கொலை செய்துகொண்ட இளைஞன் பேயாக அந்த பங்களாவில் வசிப்பது, பங்களாவில் சிக்கியவர்கள் அவன் எழுதிய கதைச் சுருக்க புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் டாஸ்க் படி நடந்துகொண்டால் உயிர் பிழைக்கலாம் என்றெல்லாம் திரைக்கதையில் பரபரப்பு கூட்டியிருக்கிறார் இயக்குநர் டி.எஸ்.ராஜ்குமார்.
சீரியல் நடிகர் சித்து சினிமா நடிகராக அறிமுகமாகியிருக்கிறார், கதாநாயகனாக தரம் உயர்ந்திருக்கிறார். பயம், பதற்றம், ஆவேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை காட்சிகளுக்குப் பொருத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சித்துவுக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன். எக்குத்தப்பாய் வந்து பேயிடம் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தையை சின்னச் சின்ன முகபாவங்களில் காட்டியிருப்பது கச்சிதம்.
நாயகனின் கதை விவாத சிநேகிதி ரியாமிகாவின் அழகும் திமிறும் இளமையும் கவர்ச்சிக்கு பயன்பட்டிருக்கிறது.
அகோரியாக சாயாஜி ஷிண்டே, பேய்களின் சக்தியை கட்டுப்படுத்துகிற எக்ஸார்சிஸ்டாக மைம் கோபி, பிளாஷ்பேக்கில் திமிர் பிடித்த இயக்குநரால் பாதிக்கப்பட்டவராக வருகிற கார்த்திக் என மற்ற நடிகர்களின் நடிப்பில் குறையில்லை.
திரைக்கதையிலிருக்கும் சுவாரஸ்யமும், காட்சிகளுக்குப் பொருத்தமான 4 மியூசிக் குழுவினரின் பின்னணி இசையும், ஏ.வி.வசந்தின் ஒளிப்பதிவிலிருக்கும் நேர்த்தியும் படம் முழுக்க நான்கைந்து முகங்களை மட்டுமே பார்ப்பதில் சலிப்பு ஏற்படாதபடி பார்த்துக் கொண்டிருக்கின்றன.
பேய்ப்படங்களில் சற்றே புது அனுபவம் பெற விரும்புகிறவர்கள் அகோரி’ ஓடும் தியேட்டரில் அட்டனன்ஸ் போடலாம்.