சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்’ வரும் அக்டோபர் 31; 2024 தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகிறது. படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
இந்திய ராணுவ வீரர்களின் தீரம் மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி எழுதி, இயக்கியிருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்திய இராணுவ மேஜர் வரதராஜனாக நடிக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரமான நடிப்பையும், அதிரடி ஆக்சனையும் வெளிப்படுத்தியிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கதாநாயகி சாய் பல்லவி தனது ஆழமான நடிப்பினால் படத்துக்குச் சிறப்பானப் பங்களிப்பை அளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் படத்துக்கு முதன்முறையாக இசையமைத்துள்ளார் ஜீ.வி பிரகாஷ். சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர் இணைந்து வடிவமைத்துள்ளனர். இந்த படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் சி.எச். சாய்.
புரொடக்ஷன் டிசைனர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர், எடிட்டர் ஆர். கலைவாணன் மற்றும் துணைத் தயாரிப்பாளர் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர்.
உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிப்பில் உருவாகியுள்ளது.