நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகியோர் நடிக்க, முழுமையான அரசியல் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘அறம் செய்.’
தாரகை சினிமாஸ் நிறுவனம் சார்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான பாலு வைத்தியநாதன் பேசியபோது,
”இந்த படத்தில் ஜீவா நீட் பற்றி பேசி இருக்கிறார். அஞ்சனா கீர்த்தி அவருடைய கதாபாத்திரத்தின் மூலம் அரசியல் பேசி இருக்கிறார். இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் அவர்களுக்கான அரசியலைப் பேசி உள்ளார்கள். இந்த படம் அரசியல் படம் தான். ஆனால் நாங்கள் பேசவில்லை, அடுத்த படத்தில் நாங்கள் வேறு கதை சொல்வோம். நமக்குத் தேவை ஆட்சி மாற்றம் இல்லை, முழுமையான அரசியல் மாற்றம். இதுதான் இப்படத்தின் திரைக்கதை. இப்படத்தில் நாட்டிலுள்ள அரசியல்வாதிகளையும், தனிநபர்களையும் அரசியல் கட்சியையும் தாக்கி பேசவில்லை, எந்த ஒரு தனி நபரையும் தாக்கி காட்சிகள் வைக்கவில்லை, அப்புறம் எப்படி இது அரசியல் படம் என நீங்கள் கேட்கலாம். 74 ஆண்டு காலம் மாறி மாறி ஆட்சி செய்த, அரசியல் கட்சிகள் மக்களுக்கு எதிராகச் செய்த செயல்களை இப்படத்தில் நாங்கள் பேசியிருக்கிறோம் அதனால் தான் இது அரசியல் படம். இந்திய அரசியல் சாசனப்படி மக்கள் ஆட்சி எப்படி இருக்க வேண்டும் எனப் பேசி இருக்கிறோம்” என்றார்.
நடிகர் ஜீவா பேசியபோது, ”இயக்குநர் கடைசி வரை கதையே சொல்லவில்லை அவர் சொன்னதைத் தான், எல்லோரும் செய்துள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.
திருச்சி சாதனா பேசியபோது, ”இந்தப்படத்தில் நான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த ரோலில் எல்லோரும் நடிக்க மறுத்துவிட்டார்கள் நீ நடிக்கிறாயா எனக் கேட்டார், எனக்குத் தயக்கமாக இருந்தது. எல்லோரும் அரசியல் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த படத்தை எடுப்பதாக இயக்குநர் சொன்னார். எனக்குத் தைரியம் கொடுத்து, நடிக்க வைத்தார். இந்த படத்திற்காக ஜெயலலிதா அம்மாவின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளச் சொன்னார். வீடியோக்கள் பார்த்து கற்றுக் கொண்டு, நடித்திருக்கிறேன்” என்றார்.