அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக, சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் வெளியான அரண்மனை 4′ படத்தில் சுந்தர் சி, நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், கோவை சரளா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளது.
பெரியளவில் வெற்றி பெற்ற இந்த படம் வரும் ஜூன் 21 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.
கமர்ஷியல் என்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார்.
அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் புதிய கதைக்களத்தைக் கொண்டுள்ளது, இது சரவணன் என்ற வக்கீலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் சரவணன் தன் சகோதரியும் அவள் கணவனும் இறந்துவிட்டதையும் அவளுடைய குழந்தைகள் ஆதரவற்றவர்களாக இருப்பதையும் அறிந்ததும், அவர்களைக் காப்பாற்ற விரைகிறார். ஆனால், செல்வி மற்றும் அவரது கணவரின் மரணம் நினைத்தது போல் இயற்கையானது அல்ல என்பதை அவர் உணர்கிறார். அதன் பின்னால் இருக்கும் உண்மைகளைக் கண்டுபிடிக்க முயல்கிறார்.
அரண்மனை 4 அசாமிய நாட்டுப்புறக் கதைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் ஒரு ஆவியை அடிப்படையாகக் கொண்டது. இது பாக் எனப்படும் நீர் ஆவியைப் பற்றியது, இது தண்ணீரில் வசிக்கும் மற்றும் அது தொடர்பு கொள்ளும் எந்த மனிதனின் வடிவத்தையும் எடுக்க முடியும். இப்படம் ரசிகர்களை நடுக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஹாரர் கலந்து காமெடியுடன் அனைவரும் ரசிக்கும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது.