ஆறு முறை பிலிம்பேர் விருது வென்றவரும், தேசிய விருது பெற்றவரும், ஐகான் ஸ்டார், ‘கிங் ஆஃப் டான்ஸ்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிற அல்லு அர்ஜுனின் காலத்தால் அழிக்க முடியாத மெழுகு சிலை துபாயில் மேடம் டுசாட்ஸ் ப்ளூவாட்டர்ஸில் கடந்த மார்ச் 28-ம் தேதி நட்சத்திரங்கள் பலர் நிறைந்த நிகழ்வில், மீடியா மற்றும் இன்ஃபுளூயன்சர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வு அல்லு அர்ஜூனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது.
இந்த சிலை அல்லு அர்ஜுனின் இந்த மெழுகு சிலை அவரது புகழ்பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடலின் கருப்பொருளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்ப்பவர்கள் அவரது சின்னச் சின்ன நடன அசைவுகளைக் கூட எளிதில் கற்றுக் கொள்ளலாம்.
பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அலா வைகுந்தபுரமுலூ’வில் இருந்து அவரது நடனக் காட்சியை நினைவுபடுத்தும் வகையில் ஒரு சிவப்பு நிற ஜாக்கெட்டில் ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸில் மெழுகு சிலை அமையப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் ஆவார்.
இந்த பெருமைமிகு தருணம் பற்றி அல்லு அர்ஜுன் பகிர்ந்து கொண்டதாவது, “நான் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மேடம் டுசாட்ஸூக்குச் சென்றிருக்கிறேன். அங்கு எனக்கு அற்புதமான அனுபவம் கிடைத்தது. இப்போது எனக்கு ஒரு மெழுகு சிலை வைத்திருக்கிறார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை! மிக்க நன்றி! என்னுடைய இந்த மெழுகு சிலை, கிட்டத்தட்ட என்னைக் கண்ணாடியில் பார்ப்பது போன்ற அனுபவத்தைக் கொடுத்தது!” என்றார்.
மேடம் டுசாட்ஸ் துபாயின் பொது மேலாளர் சனாஸ் கோல்ஸ்ரூட் கூறுகையில், “தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகர் அல்லு அர்ஜூன் என்பதில் சந்தேகமில்லை. அவரது மெழுகு உருவத்தை, குறிப்பாக நமது தென்னிந்திய பார்வையாளர்களுக்காக திறந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் இருந்து அவர் பெறும் அன்புக்குச் சான்றாக இந்த மெழுகு சிலை அமைந்திருக்கிறது. அல்லு அர்ஜூனின் மெழுகு சிலை எங்கள் விருந்தினர்களின் அனுபவத்தை மேலும் உயர்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
அல்லு அர்ஜுனின் மெழுகு சிலையை உருவாக்க, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட அளவீடுகள் எடுக்கப்பட்டு விவரங்கள் அனைத்தும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம், சிலையில் ஒவ்வொரு அம்சமும் குறிப்பாக நடன அசைவுகள் வரை சரியாக பிரதிபலிப்பதை உறுதி செய்துள்ளது.