பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘அரணம்.’
கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். மற்ற பாத்திரங்களில் லகுபரன், கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். நித்தின் கே ராஜ், நௌசத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிகே படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்க, சாஜன் மாதவ் இசையமைத்துள்ளார்.
மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. முன்னதாக டிசம்பர் 18; 2023 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பிரியன் பேசியபோது, ‘‘ஒரு தரமான படைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது ஒரு எழுத்தாளனின் படைப்பு. இந்த படத்தின் முதல் பாதியைப் பார்த்து இரண்டாம் பாதியைக் கணிக்கவே முடியாது, முழுப்படமும் உங்களை ஆச்சரியப்படுத்தும். படம் வெளிவரும்போது பார்த்து ரசியுங்கள்.
படம் எடுப்பது இப்போது மிகக் கஷ்டமாகிவிட்டது. படம் படைப்பாளிகள் கையில் இல்லை, கார்பரேட் கையில் இருக்கிறது. நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை. ஒரு பெரிய படம் வந்தால் நன்றாக ஓடுகிற சின்னபடங்களை எடுத்து விடுகிறார்கள். ஆயிரம் தியேட்டரிலும் ஓரே படம் தான் ஓடுகிறது. இப்போது எடுக்கும் 300 கோடி 400 கோடி படங்கள் எல்லாம் குப்பையாக இருக்கிறது. படம் எடுத்தா அடி, வெட்டு, இரத்தம் மட்டும் தான். கலைஞனுக்கு அறம் வேண்டாமா? காசு இருந்தால் என்ன வேண்டாலும் செய்யலாமா?. வெளி மாநிலப்படங்கள் வருவது கூட பொறுத்துக்கலாம். 10, 20 வருடம் முன் வந்த முத்து, ஆளவந்தான் எல்லாம் இப்போது வந்து தியேட்டரில் ஓடுகிறது. அதெல்லாம் டிவியில் 300 தடவை போட்ட படம். எதற்கு மீண்டும் மீண்டும் இப்படி ரீ ரிலீஸ் செய்து சம்பாதிக்க நினைக்கிறீர்கள். புதுப்படங்களுக்கு கொஞ்சமாவது வழி விடுங்கள். ஒரு கலையை அந்த துறையிலிருந்து கொண்டே அழிப்பது சினிமாவில் தான்” என்றார்.
நாயகி வர்ஷா பேசியபோது, ‘‘என்னை நம்பி இந்த வாய்ப்பைத் தந்த பிரியன் சாருக்கு நன்றி. பிரியன் சார், தன் கூட இருக்கும் அனைவரும் வளர வேண்டும் என்று நினைப்பவர். படத்தில் நானே டப்பிங் பேசியுள்ளேன் உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார்.
விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசியபோது, ‘‘அரணம் படத்தை எங்கள் நிறுவனம் சார்பில் வெளியிடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி. பிரியன் சார் எனக்கு நண்பர். இந்தப்படம் மூலம் நட்பு நெருக்கமாகிவிட்டது. அவர் இப்படத்தைப் பெரிய அளவில் கொண்டு வந்துவிட்டார், எங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது.
மாணவர்கள் சேர்ந்து குருவுக்காகப் படம் எடுத்தது இது தான் முதல் முறை. இந்தப்படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள். ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் நிறையப் படங்களை ரிலீஸ் செய்கிறது அந்த நம்பிக்கையில் நாங்கள் படங்கள் ரிலீஸ் செய்கிறோம். ஆனால் ரிலீஸ் பற்றி சில முன்னெடுப்புகளை உதயநிதி சார் எடுக்க வேண்டும். இங்கு சின்னப்படங்கள் வர முடிவதில்லை, வாராவாரம் வேற்று மொழிப் படங்கள் வருகிறது. அது தியேட்டரை ஆக்கிரமித்துக் கொள்கிறது. சின்னப்படங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. உதயநிதி சார் சின்னப்படங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு, நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் மோகன் ஜி பேசியபோது, ‘‘இப்போது எல்லோரும் ஆங்கிலத்தில் பெயர் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படியான காலத்தில் அரணம் என மிக அழகாக தமிழில் பெயர் வைத்த பிரியன் சாருக்கு வாழ்த்துக்கள். ஒரு கிரவுட் ஃபண்டிங் படம் ரிலீஸுக்கு வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. இது இரண்டாவது கிரவுட் ஃபண்டிங் படம், என்னுடையது முதல் படம் என்பதில் பெருமை. பிரியன் சார் உருவாக்கிய பத்துப் பாடலாசிரியர்கள் சேர்ந்து இப்பத்தைத் தயாரித்துள்ளனர். அவர்களுக்காக இப்படம் ஓட வேண்டும். இப்படத்தை நான் பார்த்து விட்டேன் மிக நல்ல கதை, திரைக்கதை. அருமையான சஸ்பென்ஸ் திரில்லர். படத்தில் நெகட்டிவ் பாஸிட்டிவ் என இரண்டிலும் பிரியன் சார் வந்துள்ளார். திரையில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.
பாடலாசிரியர் பாலா, பாடலாசிரியர் சஹானா, எடிட்டர் பிகே, ஒளிப்பதிவாளர் நௌஷத், தமிழ்த் திரைக்கூடம் தயாரிப்பாளர் ராஜாராம், பாடலாசிரியர் சுப்பா ராவ் உள்ளிட்டோரும் படம் குறித்து பேசினார்கள்.