பேண்டஸி ஹாரர் திரில்லர் சப்ஜெக்டில், காட்சிகள் அத்தனையிலும் பிரமாண்டம் காட்டுகிற ‘அகத்தியா.’
கலை இயக்குநரான ஜீவா சினிமாவில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து பணியாற்றுகிறார். திடீரென அந்த வாய்ப்பு பறிபோக, தன் திறமையை வைத்து பேய் பங்களா உருவாக்கி, கண்காட்சியாக்கி சம்பாதிக்கிறார். எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்கும்போது அந்த பங்களாவில் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. அதற்கான காரணங்களையெல்லாம் தெரிந்துகொள்ளும் ஜீவா, தன் அம்மாவின் கேன்சர் நோயை குணப்படுத்தும் மருந்து அந்த பங்களாவில் புதைந்திருப்பதை அறிந்து கொள்கிறார்.
மருந்து அந்த இடத்தில் புதைந்துபோனதன் பின்னணி என்ன? அதை அவரால் எடுக்க முடிந்ததா? அம்மாவை குணப்படுத்த முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும்விதத்தில் நகர்கின்றன அடுத்தடுத்த காட்சிகள்… இயக்கம் பா விஜய்
சினிமாவில் வாய்ப்பு பறிபோகும்போது காட்டும் தவிப்பு, அமானுஷ்ய சம்பவங்களை எதிர்கொள்ளும்போது காட்டும் பதற்றம், அம்மா மீது காட்டும் பாசம், அவரை குணப்படுத்த வேண்டும் என்பதில் காட்டும் உறுதி என நடிப்பில் பரபரப்பு தொற்றிய மனிதராகியிருக்கிறார் ஜீவா.
பிரெஞ்ச் அதிகாரியினுடைய தங்கையின் வியாதியைக் குணப்படுத்த மூலிகை மருந்து உருவாக்கி, அந்த அதிகாரியின் சுயநலத்துக்கு பலியாகிற ஆக்சன் கிங் அர்ஜுனின் தேர்ந்த நடிப்பு படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது. அவர் மூலம் சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகள் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
ராஷி கண்ணாவுக்கு வழக்கமான ஹீரோயின் பாத்திரம். துறுதுறுப்பாக சுற்றி வருகிற அவரது நடிப்பில் சிறப்பம்சம் ஏதுமில்லை.
கெஸ்ட் ரோலில் யோகிபாபு, ஜீவாவின் அம்மாவாக ரோகிணி, பிரெஞ்ச் அதிகாரியின் சர்வாதிகாரத்துக்கு ஜால்ரா போடுகிற ராதாரவி என நடிப்பில் அசத்துபவர்கள் திரும்பிய பக்கமெல்லாம் நிரம்பியிருக்க,
ரெடின் கிங்ஸ்லியும் ஷாராவும் கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.
1940 களிலும் இப்போதைய காலகட்டத்திலும் மாறி மாறி பயணிக்கும் கதைக்கு ஏற்றபடி சம்பவங்கள் நடக்கும் இடங்களை, பங்களாக்களை, அக்கம் பக்கத்தை, அந்தக்கால தகவல் தொடர்புக் கருவிகளை பிரமாண்டமாக உருவாக்கி படத்தின் நிஜ ஹீரோவாகியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் சண்முகம்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி தமிழர்களின் மனம்கவர்ந்த ’என் இனிய பொன்நிலாவே’ பாடலை யுவனின் ரீமிக்ஸ் வெர்சனாக கேட்கும்போது, பார்க்கும்போது மனதுக்குள் குதூகலம் பொங்குகிறது.
ஒளிப்பதிவு தரம்.
ஃபிரேமுக்கு ஃபிரேம் தென்படுகிற பிரமாண்டமும் கிராபிக்ஸ் பங்களிப்புகளும் படத்தின் பலம். இந்த கதையின் மூலம் இதைத்தான் சொல்ல வருகிறார்கள் என எந்த தீர்மானத்துக்கும் வரமுடியாமல் திணறடிக்கிற திரைக்கதை பலவீனம்.
குறைகள் பல இருந்தாலும்,
நம் தமிழ் மண்ணின் மருத்துவ சூத்திரங்கள் யார் யாராலோ எப்படி எப்படியோ தட்டிப் பறிக்கப்பட்ட வரலாறுகளை அறிந்திருக்கும் நமக்கு, இப்படியும் நடந்திருக்கலாம் என்ற கற்பனையில் உருவான இந்த படம் ஹாரர் பட வரிசையில் தனித்துவமான இடத்தை தக்கவைக்கிறது.