‘அம்புநாடு ஒம்பது குப்பம்’ திரைப்படத்தைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காலா, கபாலி, கர்ணன், பரியேறும் பெருமாள், ஜெய்பீம் வரிசையில் ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’ தலித்திய குரலாய் ஒலிக்கிறது” என்று பாராட்டு தெரிவித்தார்.
படம் பற்றி…
ஜாதி வெறியால் அடக்கி ஒடுக்கப்படும் மக்களும் அவர்களை மீட்கப் போராடும் இயக்கமும் என்ற ஒன்லைனில் உருவாகியிருக்கிறது ‘அம்புநாடு ஒம்பது குப்பம்’ என்ற திரைப்படம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் ஜி.ராஜாஜி.
இந்த படம் வரும் நவம்பர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, பல சமூக மக்கள் வாழ்கிற பின்தங்கிய கிராமம் அது. அங்கே ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிற, சக மனிதனை ஜாதியின் பெயரால் ஒதுக்கி வைக்கிற, அதற்காக எந்த எல்லைக்கும் போகிற, அதன் வழியாக ஊரை ஆள வேண்டும் என்கிற வெறியோடு இரு தரப்பு பண்ணையார்கள்…
அந்த ஊரில் கோவில் திருவிழா வருகிறது. திருவிழாவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் கோவில் பூசாரி வைத்திருந்த தாம்பூலத்தட்டை தொட்டு விபூதி எடுத்து விடுகிறார். அதனால் கலவரம் ஏற்படுகிறது, பண்ணையார்கள் தங்களுக்குள் இருக்கும் அதிகார பகையை ஒதுக்கிவைத்து விட்டு இணைகிறார்கள். ‘தாம்பூலத் தட்டை தொட்டது தீட்டாகிவிட்டது’ என்று சொல்லி நாட்டு கூட்டம் நடத்த திட்டமிடுகிறார்கள்.
அதே பகுதியில், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக விடுதலைக்காக போராடக்கூடிய அரசியல் இயக்கம் ‘நாட்டு கூட்டத்திற்கு போகக்கூடாது, சட்டப்படி பிரச்சனையை எதிர்கொள்வோம்’ என்று சொல்லி பட்டியல் சமூக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
அதை தெரிந்துகொண்ட பண்ணையார்கள், இயக்கத்தினரிடம் தாங்கள் தோற்றுவிட்டால், தங்களது ஜாதி கௌரவத்திற்கு இழிவு ஏற்பட்டுவிடும் என்று கருதி தாம்பூலத் தட்டை தொட்ட இளைஞரை கொலை செய்து விடுகிறார்கள். அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி தரும்படி, பரபரப்பாக இருக்கும்படி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் ஜி.ராஜாஜி.
படத்தில் இடம்பெற்றுள்ள கருத்தாழமிக்க பாடல்களுக்கு பிரபல பாடகர் அந்தோணி தாசன் இசையமைத்துள்ளார். ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசையமைத்துள்ளார்.
படக்குழு:-
தயாரிப்பு: பூபதி கார்த்திகேயன்
மூலக்கதை: துரை குணா
எழுத்து, இயக்கம்: ஜி.ராஜாஜி
ஒளிப்பதிவு: மகேஷ்
பாடல்களுக்கு இசை: அந்தோணி தாசன்
பின்னணி இசை: ஜேம்ஸ் வசந்தன்
எடிட்டிங்: பன்னீர் செல்வம்
பாடல்கள்: லா வரதன், கடல் வேந்தன்
நடனம்: ராதிகா
சண்டைப் பயிற்சி: குங்பூ குணா
மக்கள் தொடர்பு: விஎம் ஆறுமுகம், ராஜ்குமார்