அசத்தலான திருப்பங்களை சுமந்து வெளிவந்திருக்கிற சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர்.
அடர்ந்த காட்டுப் பகுதி, அதற்குள் ஒரு வீடு, அதில் எழுந்து நடமாட முடியாத நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த பெண்மணியை கவனித்துக் கொள்ளும் பணியில் இணையும் இளம்பெண் மகிழ்நிலா.
மகிழ்நிலா அந்த நடுத்தர வயதுப் பெண்ணை கவனித்துக் கொள்ளும் பணியில் சேர்ந்ததில் இருந்தே, மொபைல் போன் சிக்னல் சரிவர கிடைக்காமல் வெளியுலக தொடர்பு விட்டுப் போகிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் நடமாட்டம் கிடையாது. இந்த நிலையில், அந்த இளம்பெண்ணின் தலைமுடி நரைப்பதிலிருந்து உடலளவில் அவளுக்கு சிலபல மாற்றங்கள் உருவாகிறது. அதன் பின்னணியில் மிகப் பெரிய சதியும் நம்பிக்கைத் துரோகமும் இருக்கிறது.
அந்த சதி என்ன? நம்பிக்கைத் துரோகம் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களே திரைக்கதை…
மகிழ்நிலாவாக வருகிற கதையின் நாயகி கவிபிரியா அழகாக இருக்கிறார்; பயம் பதட்டம் என அவருக்கான காட்சிகளில் பொருத்தமான முகபாவம் காட்டி நடித்திருக்கிறார். ரொமான்ஸிலும் அம்மணியின் பங்களிப்பு அசத்துகிறது.
ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறி மாறி களமாடும்படியான கதாபாத்திரம் மைக்கேல் தங்கதுரைக்கு. கவிப்பிரியாவுடனாக காதல் காட்சிகளில் மென்மையான ஹீரோவாக மனதைக் கவர்பவர், இளமையைத் தக்க வைத்துக் கொள்ள எதையும் செய்யத் துணிகிறவராக கொடூர முகம் காட்டி வில்லத்தனத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
எழுந்து நடமாட முடியாதவர், உணவை சுயமாக எடுத்துச் சாப்பிட முடியாதவர் என்றாலும் ஒருசில காட்சிகளைத் தவிர்த்து உற்சாகமாகவே வலம் வருகிறார் ஸ்ரீரஞ்சனி. அதற்கு வலுவான காரணம் கதையிலிருக்கிறது.
தனியறையில் சங்கிலியால் கட்டப்பட்டு அவஸ்தைகளை அனுபவிக்கும் கர்ப்பிணியாக கலைராணி. கதையோட்டத்தின் கனமான பாத்திரத்திற்கு வழக்கம்போல் ஓவர் ஆக்டிங்கால் எனர்ஜி தந்திருக்கிறார்.
சூர்யா வைத்தியின் ஒளிப்பதிவில் கதை நடக்கும் மலைப் பிரதேசத்தின் அழகு கண்களுக்கு விருந்து படைக்கிறது. விவேக், ஜெஸ்வந்த் கூட்டணியின் பின்னணி இசை காட்சிகளின் பரபரப்புக்கு சுறுசுறுப்பு தரும் ஊக்க மருந்தாகியிருக்கிறது.
எத்தனை வருடங்களானாலும் தனது இளமை குறையாமலிருக்க வேண்டும் என்றும், தன்னை மரணம் நெருங்கக்கூடாது என்றும் நினைக்கும் ஒரு மனிதனை மையப்படுத்தி அருண் கே ஆர் இயக்கியிருக்கும் இந்த விறுவிறுப்பான சஸ்பென்ஸ் திரில்லர் வித்தியாசமான படங்களை விரும்புவோருக்கு கணிசமான திருப்தி தரும்.