விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களை புரட்டிப் பார்க்கும் விதத்தில் உருவாகியிருந்த ‘ஹாட் ஸ்பாட்’ கடந்த மார்ச் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதையடுத்து படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், படத்தை தயாரித்த KJB டாக்கீஸ் பால மணிமார்பண், சிக்ஸர் எண்டர்டையின்மெண்ட் தினேஷ் கண்ணன், நடிகை ஜனனி, நடிகர் சுபாஷ், நடிகை சோபியா, நடிகர் திண்டுக்கல் சரவணன், நடிகர் அமர், எடிட்டர் முத்தையா, இசையமைப்பாளர் வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியபோது, ”இந்தப்படத்தின் பிரஸ் ஷோவின்போது, மிகவும் பதட்டமாக இருந்தேன். நீங்கள் கைதட்டிப் பாராட்டியது உண்மையிலேயே மிக சந்தோசமாக இருந்தது. நல்ல படம் என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்பது நிரூபணமானது. இன்னொரு வேண்டுகோள், திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வீக் டெஸில் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆனால் தான் அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள், ஆனால் வார நாட்களில் பெரிய ஹீரோக்களுக்கே கூட்டம் வராது. இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2-வோடு, எங்கள் குழுவோடு உங்களைச் சந்திக்கிறோம்” என்றார்.
படத்தை தயாரித்த KJB டாக்கீஸ் பால மணிமார்பண் பேசியபோது, ”மக்கள் இந்தப்படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், பாராட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பத்திரிக்கையாளர்கள் தான். உங்களுக்கு நன்றி. விக்னேஷ் ஷார்ட்ஃபிலிம் எடுக்கும் காலத்திலிருந்து தெரியும். அப்போதே படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் புரடியூசர் ஃப்ரண்ட்லி. தயாரிப்பாளர்களுக்காகப் பார்த்துப் பார்த்து செய்வார். இடையில் விக்னேஷுக்கு அடியே படம் கிடைத்தது, அதனால் தான் இந்தப்படம் லேட் ஆனது. விக்னேஷை சுற்றி வேலை பார்க்கும் அனைவரும் மிக அர்ப்பணிப்போடு வேலை பார்ப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்போது படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் ஷோ ஃபுல்லாக போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள் தான், உங்கள் எல்லோருக்கும் நன்றி” என்றார்.
நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் செவன் வாரியர்ஸ் சுரேஷ்குமார், விக்னேஷ் கார்த்திக்கு அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் செக் தந்து வாழ்த்தினார். அதையடுத்து படக்குழுவினர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ‘ஹாட் ஸ்பாட் 2’ உருவாகவுள்ளதை அறிவித்தனர்.