புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியுள்ள மாறுபட்ட காதல் படம் ‘என் சுவாசமே.’ விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் நாயகன் ஆதர்ஷ், படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ஆர் மணி பிரசாத். நடிகை கொலப்பள்ளி லீலா, நடிகை அம்பிகா மோகன், பாடலாசிரியர் ஶ்ரீவித்யா, இசையமைப்பாளர் பிஜே , பாடலாசிரியர் கிருஷ்ணகுமார், இணை தயாரிப்பாளர் ஶ்ரீதர் கோவிந்தராஜ், இணை தயாரிப்பாளர் ரமேஷ் வெள்ளைதுரை, இயக்குநர் பேரரசு, ஜாக்குவார் தங்கம், சினிமா மக்கள் தொடர்பாளர் விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டவர்.
நடிகர் சாப்ளின் பாலு, ”நான் இந்த படத்தில் ஒரு சின்ன கேரக்டர் தான் நடிக்கப் போனேன், எனக்குப் பெரிய கேரக்டர் தந்து, படம் முழுக்க வரவைத்து விட்டார் இயக்குநர். கஷ்டப்படும் நடிகர்கள் இருந்தால் சொல்லுங்கள் வாய்ப்பு தருகிறேன் என்று தயாரிப்பாளர் சொன்னார், அவர் மனதிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன், ”மலையாளத்திலிருந்து படமெடுக்கிறவர்கள் நல்ல தமிழ் டைட்டில் வைக்கிறார்கள். ஆனால் தமிழில் ஆங்கில டைட்டில் வைக்கிறார்கள். மலையாள சினிமாவில் எப்பவும் கதைக்காகத் தான் ஹீரோ. ஹீரோவுக்காக படம் செய்ய மாட்டார்கள். என் சுவாசமே படத்தை சிறப்பான படமாக கொண்டு வந்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் ஆர் வி உதயகுமார், ”என் சுவாசமே என டைட்டில் வைத்ததற்கு பாராட்டுக்கள். கண்டிப்பாக படம் வெற்றிப் பெறும். மலையாளம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்திய அளவில் மலையாளக் கலைஞர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். கதையை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கலைக்கு மொழி கிடையாது” என்றார்.
நடிகர் விஜய் விஷ்வா, ”சின்ன படங்கள் வியாபாரத்தில் சினிமா சங்கங்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.